மது பார் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று மதுவை மையப்படுத்திய கதை. இறுதியில் வென்றது யார்? என்பது கிளைமாக்ஸ். இதற்கிடையே அவர்களுக்குள் ஊடுபொருளாக தேங்கி நிற்கும் ஒரு அழகாக காதலையும் சொல்கிறார்கள்.
நாயகனாக தீரன், அந்த கட்டுமஸ்தானதோற்றத்தில் கேரக்டரை தாங்கிப்படிக்கிறார். நடிப்பும் வருகிறது. அடிதடியிலும் ‘அடடே’ ஆச்சரியப்படுத்துகிறார். காதலி பாதிப்புக்கு ஆளாகும்போது இவரது ரியாக்ஷன் தேர்ந்த ஹீரோவுக்கான அடையாளம்.
நாயகியாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கட். காதல் வளையத்துக்குள் வரும் நடிகைகளில் இருந்து மாறுபட்டு தெரிகிறார். நாயகனுக்கும் இவருக்குமான ஈர்ப்பு காட்சியில் காட்டும் முகபாவனைகளில் ‘ஜில்’லாகிறது, மனசு. மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் அந்த கேரக்டர் அவரை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போகிறது.
சார்லஸ் வினோத், அருள்தாஸ் வில்லத்தனத்தில் மிளிர்கிறார்கள்.
ஸ்ரீநாத் சிரிக்க வைக்கிறார். சம்பத்ராம், யோகிராம் கொடுத்த கேரக்டர்களில் நிலை நிற்கிறார்கள்.
தீசன் இசையில் பாடல்கள் கேட்கலாம். ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் கேமரா வடசென்னையை பசியோடு மேய்ந்திருக்கிறது. கிளைமாக்ஸ் விபத்து காட்சியில் இவரது கேமராக்கண்கள் இதயம் வரை திகில் எற்படுத்தி விடுகிறது.
குடி மட்டுமின்றி குடிக்கு அடிமையானவர்களிடம் இருந்தும் விலகி இருப்பதே சாலச் சிறந்தது என்பதை காட்சி வாரியாக சொன்னவிதத்தில் இயக்குநர் எஸ்.டி.மணிபால் தனித்து தெரிகிறார். . மதுவுக்கு எதிரான கருத்தை மையமாகக் கொண்ட திரைக்கதையில் காதல், மோதல் என கமர்ஷியல் அம்சங்களையும்அளவாக சேர்த்ததில் இந்த சாலா, நிஜமாகவே ஆஹா.