கிராமத்து சலவைத் தொழிலாளியின் மகள் சர்க்காரின் ஆளுமை நாற்காலி யை எட்டிப் பிடித்த கதை.
அந்த சின்ன கிராமத்தில் சலவைத் தொழில் செய்யும் ஆட்டுக்குட்டி புரூஸ்லியின் மகளான பிரின்ஸிக்கு ஐ.ஏ.எஸ். படிக்க ஆசை.
நன்றாக படிக்கும் பிரின்ஸிக்கு ஊர்ப் பெரிய மனிதரான ராஜசோழன் உதவுகிறார். அந்த உதவி மூலம் பிரின்ஸி பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு போகிறார். கல்லூரி படிப்பை முடித்த கையோடு வெளியூரில் உள்ள ஐஏஎஸ்.கோச்சிங் சென்டரிலும் சேர்ந்து படிக்க சேர்த்து விடுகிறார்.
அங்கே இன்னொரு பெண்ணுடன் அறை எடுத்து தங்கிக் கொள்கிறார்.
அந்தப் பெண் நல்லவள் என்றாலும் அவள் மூலம் ஒரு பெரிய பிரச்சனை பிரின்சிக்கு வருகிறது. இதனால் வாடகை வீடு கொடுத்த பெண்
பிரின்சியை ஒரு நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்துகிறாள்.
இம்மாதிரியான சோதனைகள் எல்லாம் தாண்டி பிரின்சி எப்படி ஐஏஎஸ். தேர்வில் வென்று மாவட்ட ஆட்சியாளர் ஆகிறார் என்பதை உணர்வுபூர்வமாக சொல்கிறது திரைக்கதை.
கதையின் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரின்ஸி, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற சரியான தேர்வு. களையான முகமும், கபடமில்லா சிரிப்பும் கூடுதல் பிளஸ்.
தனது ஏழ்மை நிலையிலும் நன்றாக படிக்கும் அவர், ஒவ்வொரு தடையையும் தாண்டி முன்னேறும் போது, உணர்வுப்பூர்வமான நடிப்பை இயல்பாக வழங்கி அவர் ஏற்ற கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு ஜீவன்
கொடுத்திருக்கிறார்.
வாழ்க்கையில் முன்னேற படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் துரை கதாபாத்திரத்தில் படத்தை இயக்கிய ராஜசோழன் நடித்திருக்கிறார். அவர் வந்து நின்றாலே அதிருது திரை என்கிற அளவுக்கு வலுவான அந்த கேரக்டரில் பிரகாசிக்கிறார்.
எங்கே அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் முதல் ஆளாக அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் கதை நிமிர்ந்து நிற்கிறது. காட்சி வீரியமாகிறது
அதிரடி காட்சிகளிலும் அதகளம் செய்கிறார்.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஆட்டுக்குட்டி புரூஸ்லி, இயல்பான நடிப்பில் இதயம் பதிகிறார்.
காவல்துறை அதிகாரி, நாயகியின் பொறாமை பிடித்த பள்ளித் தோழி, நாயகியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி என அவரவர் பாத்திரங்க ளில் கதையோடு கலந்து போகிறார்கள்.
பிரின்சியின் அறைத் தோழி கேரக்டர் அனுதாபகரமானது என்றாலும், அதனால் நாயகி எதிர்காலம் என்னாகும் என்ற பதை பதைப்பை மனதுக்குள்
விதைத்து விடுகிற
கதைக்களம் காட்சிகளின் பரபரப்பை கூட்டி விடுகிறது.
இசையமைப்பாளர் அரவிந்த் பாபு இசையில், இயக்குனர் தா.ராஜசோழன் வரிகளில் பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு பாடம்.
ஒளிப்பதிவாளர் கேசவன், கிராமத்து அழகை அதன் இயல்போடு தந்து கண்களை நிறைவாக்குகிறார்.
எழுதி இயக்கியிரு ப்பதோடு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் தா. ராஜ சோழன். முதல் படத்திலேயே மக்களுக்கு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கும் அவரது முயற்சியை மனமுவந்து பாராட்டலாம் .நெகிழ்வான அந்த கிளைமாக்ஸ் உருக்கமானது. மனதுக்கு நெருக்கமானதும் கூட.
கண்ணம்மா, நீ மனசுக்குள்ள நிக்கிறேம்மா.