காதலை புதிய கோணத்தில் அணுகி இருக்கும் படம். அதை முழுக்க முழுக்க இளமை பேக்கேஜில்
தந்திருக்கிறார்கள்.
சேலத்தில் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்த கையோடு சென்னைக்கு வந்து வேலையில் சேர்கிறார் இளைஞர் விது.
29 வயதாகியும் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விதுவுக்கு பொக்கிஷமாக கிடைக்கிறார் நாயகி பிரீத்தி அஸ்ரானி. முதல் சந்திப்பில் பார்வை பரிமாற்றம், அடுத்தடுத்த சந்திப்புகளில் பரிணமிக்கும் காதல் என்று விதுவின் வாழ்க்கை அழகாகிறது.
தனக்கு கிடைக்கப் பெற்ற காதலன் அடையாளமும், பீரித்தியின் உயிருக்கு உயிரான காதலும் விதுவை மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்திருக்கின்றன.
‘காதலே உலகம் … காதலியே வாழ்க்கை’ என்று தன்னை புது அவதாரமாக காட்டிக் கொள்ளும் விது, இந்த பரம சந்தோஷம்போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்க…
ஆனால் ஒரு கட்டத்தில் காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதிலும் சாதித்தால் மட்டுமே முழுமையான மனிதன் என்ற அடையாளம் தன்னை வந்து சேரும் என்பது விதுவுக்கு புரிய வர…
இந்த சந்தர்ப்பத்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதை தன் லட்சியமாக வைத்திருக்கும் பிரீத்தி, அதற்கான கவனம் செலுத்த நேர்ந்ததில் தங்கள் காதலில் சிறு இடைவெளியை உணரும் விது, எதிர்பாராமல் ஒரு முடிவை மேற்கொள்கிறார். அந்த முடிவு அவர்கள் காதலை காவு வாங்கும் அளவுக்கு போகிறது. அது என்ன என்பது கொஞ்சமும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக வந்து மிரட்டிய விதுவுக்கு இதில் நாயகனாக புரமோஷன். நாயகனாகவும் நடிப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். காதலனாகவும் கவர்கிறார். காதல் மட்டுமே தன் அடையாளம் என்பதை அவர் பெருமிதமாக உணரும் தருணம், அந்த நடிப்பு அத்தனை அழகு.
காதல் இடைவெளியை தவிர்க்க காதலிக்கு அவ்வப்போது தன்னை நினைவூட்டி கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சின்சியர் காதலனாக காதலியை எரிச்சல் படுத்தும் நாயகனாக அழகாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
கிளைமாக்சில் காதலியை சந்திக்கிற அந்த இடத்தில் நெஞ்சமெல்லாம் நிரம்பி நிற்கிறார், நடிப்பில். தமிழுக்கு ஒரு நல்ல நாயகன் கிடைச்சாச்சு.
நாயகியாக வரும் பிரீத்தி அஸ்ரானி, அந்த அழகான காதலி கேரக்டரில் நடிப்பில் நிதானமாக அடித்து ஆடுகிறார். தாயையும் தன்னையும் தன் தந்தை பிரிந்த காரணம்பற்றி காதலன் சொல்லிஅவமானப்
படுத்தும் இடத்தில் உடைந்து நொறுங்குகிறாரே, அந்த ஒரு இடம் போதும் இவரது நடிப்புக்கு மகுடம் சூட்ட.
நாயகனின் ரூம் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், இயக்குனர் கனவில் காதலை கோட்டை விட்டதை அவரே கூறும் இடம் ரசனை.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் சிறப்பு. நாயகனின் அம்மாவாக ஆதிரா பாண்டியலக்ஷ்மி, நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடிப்பில் அழகு சேர்த்திருக்கிறார்கள். ஒரு காட்சி என்றாலும் உயிரோட்டமான நடிப்பில் பிரேம்குமார் ஆஸம்.
மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காதலர்களின் கதைக்குள் நம்மையும் அழகாக இணைத்துக் கொள்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அத்தனையும் காதலின் கொண்டாட்டம்.
மேயாத மான் வெற்றிப் படம் தந்த ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். காதலர்களின் ஊடல் கூடல் மட்டுமே கதை என்றாலும், காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தும் காட்சி அமைப்புகள்
இந்த காதல் படத்தை கான்கிரீட் தூண்களாக தாங்குகின்றன. காதலன் கடற்கரையில் தனது காதலை சொல்லும் இடம் இயக்குனர் முத்திரை.நாயகியின் தந்தை சம்பந்தப்பட்டஅந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
பிளஸ்: காதலை புதிய கோணத்தில் அணுகிய இயக்குனரின் ரசனை.
பிளாஷ்: இப்படி ஒரு காதலி கிடைப்பாரா என்று ஏங்க வைத்த நாயகி கேரக்டர்.
ரேட்டிங்: 6.5 /10.