காந்தா – திரை விமர்சனம்

அப்போதையb காலக்கட்டத்தில் பிரபல நடிகராக இருந்த ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி வைக்கிறது என்று சொல்வதே இந்த காந்தா.

நடிகராக துல்கர் சல்மான். இயக்குனராக சமுத்திரக்கனி. இந்த இருவருக்கும் முதலிலேயே பாராட்டை சொல்லி வைப்போம். சிறந்த நடிப்புக்காக இருவருக்குமே விருதுகள் நிச்சயம்.

தன்னை ஆளாக்கிய இயக்குநர் சமுத்திரக்கனியின் லட்சியப் படமாக உருவாகும் சாந்தா படத்தில் துல்கர்சல்மான் நடிக்கிறார். சமுத்திரக்கனியால் நடிப்பில் பட்டை தீட்டப்பட்ட நடிகராக துல்கர் இருந்தாலும், அடுத்தடுத்த 10 சூப்பர் ஹிட் படங்கள் மூலம் இப்போது துல் கர் புகழின் உச்சியில்.

இதனால் தன் குரு இயக்கும் படத்தில் கதையில் துல்கர் சில திருத்தம் சொல்ல, அது குருவுக்கு கௌரவ பிரச்சனை ஆகி விடுகிறது. என் படத்தில் என் கதையை ஒரு வரி கூட மாற்ற முடியாது என சமுத்திரக்கனி ஆவேசத்தில் வார்த்தைகளை கொட்ட, பாதி வளர்ந்த நிலையில் படம் நின்று விடுகிறது.

ஆனாலும் ஒரு நல்ல கதையை இழக்க விரும்பாத பட நிறுவனம், அவர்கள் இருவரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்துகிறது.

இந்த சமரசத்துக்கு உடன்பட்ட இருவரும் மறுபடியும் ஸ்டுடியோவில் சந்திக்கிறார்கள். அப்போது நாயகன், இந்தப் படத்தின் பெயர் சாந்தா அல்ல காந்தா என்கிறார். காட்சிகளில் சற்று மாற்றம் வேண்டும் என்கிறார். இது இயக்குனரின் ஈகோவை மீண்டும் சீண்டிப் பார்க்க…

நாயகன் துல்கரை உருவாக்கிய மாதிரியே இப்போது பாக்யஸ்ரீயை இந்த படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தி சிறந்த நடிகையாக உருவாக்க திட்டமிடுகிறார் சமுத்திரக்கனி. அதற்காக பாக்யஸ்ரீயை தன் மகள் ஸ்தானத்தில் வைத்து தன்னுடனே பராமரிக்கிறார். அந்த நன்றி விசுவாசத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் கேட்பேன் என்கிறார் படத்தின் நாயகி பாக்யஸ்ரீ.

ஆனால் அந்த பிடிவாதம் தண்ணீரில் எழுதிய எழுத்து போல் கலைந்து விடுகிறது. நாயகனுடன் தொடர்ந்து நடிக்கும் காதல் காட்சிகள் நாயகிக்கு நாயகன் மீது காதலை உற்பத்தி செய்து விடுகிறது.
ஏற்கனவே கோடீஸ்வரர் வீட்டுப் பெண் காயத்ரியை திருமணம் செய்து இருந்த நாயகன், இப்போது நடிகை பாக்யஸ்ரீயின் அன்பில் கட்டுண்டு திருமணத்துக்கு தயாராகிறார்.

இந்த செய்தி நாயகனின் மனைவி குடும்பத்தை எட்ட, விடுவார்களா அவர்கள்…

நாளை திருப்பதியில் திருமணம் காலையில் தயாராக இரு என்று காதலி பாக்யஸ்ரீயிடம் துல்கர் சல்மான் சொல்லிப் போக..

அன்றைய இரவே விபரீதம் நடக்கிறது. நெஞ்சில் இரண்டு துப்பாக்கி தோட்டா வை வாங்கியபடி சாய்கிறார் நாயகி பாக்யஸ்ரீ.

நாயகி உயிர் பிழைத்தாரா? அவரை கொல்லத் துணிந்தது யார்? இத்தனை களேபரத்துக்கு பின்பும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்ததா? என்பதை கடந்த காலத்துக்கே போய் திரை அமுதமாக தந்திருக்கிறார்கள்.

பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பு சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயருடன் நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் ஒரு நடிப்பு சக்கரவர்த்தி என்பதை காட்சிக்கு காட்சி நிரூபித்திருக்கிறார். அவரது தோற்றம், அந்த காலத்துக்கேற்ப சிகை அலங்காரம், வசீகர முகம் ஆகியவற்றுடன் காட்சிக்கு காட்சி நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். உடன் நடிக்கும் நடிகையுடன் காதல் என்ற நிலையில் அதற்கான எதிர்ப்பு

எழத்தொடங்கிய சூழலில் தனக்குள்ளான தடுமாற்றங்களை அமைதியாக பிரதிபலிக்கும் இடங்கள் நடிப்பில் அத்தனை அழகு. குறிப்பாக தன்னை நடிகனாக உருவாக்கிய இயக்குனர் சமுத்திரக்கனியிடம் நடிகைக்கும் அவருக்குமான ஆழமான காதலை சொல்லும் இடம், நடிப்பின் உச்சம். கிளைமாக்ஸ் காட்சியில் நடிகையை மடி மீது போட்டுக்கொண்டு கதறி அழுதபடி பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகனின் கண்களில் அருவியை வரவழைக்கும். இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, நடிப்பில் காட்டாறாக பாய்ந்திருக்கிறார். இவருக்கும் இவர் உருவாக்கிய நாயகனுக்கும் இடையேயான ஈகோ தான் கதையின் மையம் என்பதால் அந்த இயக்குனர் பாத்திரம் இவரது நடிப்பில் பட்டை தீட்டிய வைரமாகி விடுகிறது. நாயகனுக்கு இணையான வேடம் மட்டும் அல்ல, நடிப்பிலும் அவருடன் போட்டி போட்டு நடித்து அசத்துகிறார்.

நாயகியாக பாக்யஸ்ரீ, தூய தமிழில் வசனம் பேசி கவர்கிறார். ஆளும் அழகு. நடிப்பும் அழகு. சமுத்திரக்கனியி டமான அவரது குரு விசுவாசம் தனிரகம்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதியின் நடிப்பு, கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் , அந்த கேரக்டரைக் கூட போகப்போக ரசித்து ரசிக்க வைத்து விடுகிறார்.

உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ், (நடிகர் நாகேஷின் பேரன் ) ”அண்ணா…அண்ணா…” என்று அழைத்தே பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறார்.

துல்கர் சல்மானின் மனைவியாக காயத்ரி, நாயகனின் மாமனாராக நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் சிறிய வேடம் என்றாலும் கடுகு சிறுத்தாலும் குறையாத காரம்.

இனிமையான பாடல்கள் மற்றும் மென்மையான பின்னணி இசையோடு காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் இசையமைப்பாளர் ஜானு சந்தர், தனது இசை மூலம் கதாபாத்திரங்களின் மனநிலையை அற்புதமாக நமக்குள் கடத்தி விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் கேமரா அந்த கால சினிமாவுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை நையாண்ட வித த்தில் அறிமுகப் படத்திலேயே தேர்ந்த இயக்குனர் விருதை வாங்கி விடுகிறார் ராமலிங்கம்.

-காந்தா, தமிழ் சினிமாவின் பெருமிதம்.

Comments (0)
Add Comment