வடசென்னை வட்டாரப் பகுதிகளில் ரௌடித் தொழிலை, கார்ப்பரேட் கம்பெனிக்கு நிகராக நடத்தி வருபவர் பூங்காவனம். ( ஆனந்தராஜ்) சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரௌடிகளை, அந்தந்த பகுதியின் பொறுப்பாளர்களாக நியமித்து பல விதமான குற்றச்செயல்களை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார். இதில் சில கொலைகளும் அடக்கம்.
ஆனால் பாதிக்கப்பட்ட யாரும் அவர் மீது புகார் தர போலீஸ் நிலையம் வந்ததில்லை.
இப்படி காவல்துறை கண்ணில் விரல் விட்டு ஆட்டும் பூங்காவனத்தை ஏதாவது வழக்கில் உள்ளே தள்ள துடிக்கிறார்,போலீஸ் ஏசிபி சம்யுக்தா. இந்நிலையில் தேச விரோத வழக்கு ஒன்றில் சிக்குகிறார் பூங்காவனம். இனி போலீசின் துப்பாக்கி நம் மீது நீட்டப்படும் என்பதை தெரிந்து கொண்ட பூங்காவனம் எஸ்கேப் ஆகிறார். அவரை வேட்டையாடத் துடித்த ஏ சி பியிடம் அவர் சிக்கினாரா… தாதா சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததா? என்பது மீதிக் கதை.
இதை ரொம்பவே சீரியஸாக சொல்லாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் சொல்லி இருப்பதால் படம் வெகுஜன ரசனைப் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறது.
வடசென்னையை ஆட்டி வைக்கும் பூங்காவனம் எனும் டானாக ஆனந்த்ராஜ், வழக்கம்போல் மிரட்டலாகவும், கலகலப்பாகவும் அவருக்கே உரிய பாணியில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
அவரது மனைவிகளாக வரும் தீபாவும், சசிலயாவும் ஷகிலாவை பார்த்த மாத்திரத்தில் ஒன்று சேரும் அந்த கிளைமாக்ஸ் இன்னொரு கலகலப்பு அத்தியாயம். ஆனந்தராஜை எப்படியாவது பிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் செயல்படும் காவல்துறை அதிகாரியாக சக்யுக்தா, காக்கி உடையில் மட்டுமின்றி நடிப்பிலும் கம்பீரம். ஒரு சண்டைக்காட்சியிலும் எதிரிகளை எகிறி அடிக்கிறார்.
கொண்டித்தோப்பு வரதன் கதாபாத்திரத்தில் தாதா கூட்டணியில் முக்கிய புள்ளியாக முனீஸ் காந்த் வருகிறார். ஆனந்தராஜை கொல்ல இவர் போடும் திட்டங்கள் அத்தனையும் கலகலப்புக்கு உத்தரவாதம்.
ஆனந்தராஜ் மகளாக வரும் ஆராத்யாவும் ஓகே.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் அசோக்ராஜின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடிக்கும் பக்கத்தூண்கள்.
வி.சுகந்தி கதைக்கு அண்ணாதுரை, திரைக்கதை எழுத, இயக்கியிருக்கிறார்.அறிமுக இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன். ஒரு தாதா கதையை கலகலப்புடன் நகர்த்தும் வித்தை வசப்பட்டு இருப்பதால் படம் ரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது. கிளைமாக்ஸ்
ட்விஸ்ட் இன்னும் அதிரடி.