வாழ்க்கையில் சீக்கிரமே செட்டில் ஆக வேண்டும் என்ற மனநிலை கொண்டவர் கதிர். அதற்காக தவறான பாதையை தேர்ந்தெடுத்து மாட்டிக் கொண்டதில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்நிலையில் தனது மனைவி மகனுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்து கொண்டிருப்பவர், மீண்டும் சட்ட விரோதமான தொழிலை செய்யத் தொடங்குகிறார். விசேஷங்களுக்காக மட்டுமே அங்கே தயாரிக்கப்படும் போதை தரும் மூலிகை ரசத்தை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கிறார்.
இதற்கிடையே, அந்த மலைக் கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரிக்கும் வேலையை ரகசியமாக செய்து வருகிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்பது அவர் திட்டம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவரது திட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கதிரின் மனைவி. இதனால் அந்த பெண்மணி முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் பகைக்கு ஆளாகிறாள்.
இந்த நிலையில் சட்ட விரோத மது வியாபாரத்துக்காக கதிரை போலீஸ் தேட…
கதிர் குடும்பத்தின் மீதான முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பகை என்னவானது… அந்த மலை கிராமத்தில் கதிர் தம்பதிகளால் தொடர்ந்து இருக்க முடிந்ததா என்பதை இயல்புக்கு நெருக்கமாக சொல்லி இருக்கும் படம்.
கதையின் நாயகன் கதிராக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். திருந்தி விட்டதாக மனைவியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மறுபடியும் தவறான ரூட்டை தேர்ந்தெடுக்கும் இடத்தில் குற்ற உணர்வு சிறிதும் இல்லாத அந்த நடிப்பும் உடல் மொழியும் அடடா ரகம். அவரது மனைவியாக வரும் அபிராமி போஸ், கிராமத்து பெண் கேரக்டரில் அத்தனை இயல்பு. முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் ரகசியத்தை அம்பலப்படுத்தும் இடத்தில் பெண் புலியின் சீற்றம் அவர் முகத்தில்.
முன்னாள் ஊர் தலைவர், போஸ்ட் மாஸ்டர் பெண்மணி, கையெழு த்து போடத் தெரியாத பஞ்சாயத்து தலைவி, மலை கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும் முருகன் கேரக்டரில் வருபவர், அந்த மனப்பிறழ்வு பாட்டி மற்றும் கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அந்த மலை கிராமத்து மாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார் பரத் ஆசிகவன் .
ஒளிப்பதிவாளர் ராம் தேவ் எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் தரமான காட்சிப் பதிவில் கிராமத்தோடு நம்மையும் இணைத்துக் கொள்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அங்கு புதிதாக குடியேறிய கதிர் குடும்பத்து பின்னணியில் சொல்லி இருக்கிறார்.
மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு புதிய கோணத்தில் கதை சொன்னதும் படத்தை விருதுகள் பட்டியலில் கொண்டு சேர்த்து விடுகிறது.
அந்த மூலிகை ரசம் கதையின் தனித்துவ அடையாளமாகி விடு கிறது.
மொத்தத்தில் இந்த ‘வெள்ளக் குதிர’ கொள்ளை அழகு.