ரஜினி கேங் –திரை விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும், நாயகி த்விவிகாவும் காதலர்கள். தங்கள் காதலுக்கு கிளம்பிய எதிர்ப்பில் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார். வழியில் திருடனான கல்கியும் அந்த காரில் ஏறிக்கொள் கிறார்.

விடிந்ததும் அவர்கள் வந்து இறங்கிய புது ஊரில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்காக தாலியை அவர்களின் காரில் வந்த கல்கி கொடுக்கிறார்.
தாலி கழுத்தில் ஏறியதும் நாயகி முகம் மாறுகிறது. குரல் மாறுகிறது. அது தெரியாமல் ஆசையுடன் அருகில் வந்த கணவன் சட்டையை பிடித்து, ‘ எவன்டா எனக்கு தாலி கட்டினது?’ என்று ஆவேசமாக கேட்கிறாள் புதுப்பெண்.

இத்தனைக்கும் தாலி மூலம் வந்த அந்த ஆவி தான் என்பதை உணரும் நாயகன், அந்த ஆவியை விரட்ட முடிவெடுக்கிறான்.

தாலி பின்னணியில் உள்ள அந்த ஆவி எத்தகையது? அது துரத்தப்பட்டு காதல் தம்பதிகள் இணைந்தார்களா? என்பதை சிரிப்பு பாதி சீரியஸ் மீதியாக சொல்ல முயன்று இருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காதல், காமெடி, நடனம் என எல்லா ஏரியாவிலும் இறங்கி அடிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் த்விவிகா, ஆவி பிடித்த பெண்ணை நடிப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் தூங்கி தூங்கி வழிகிறார். அடிக்கடி மறக்கிறார். நமக்கு சிரிப்பு வராமல் அவரே சிரிக்கிறார்.( இவரது கேரக்டர் எப்படியானது என்பதை ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக கூட வைக்கலாம்.)

கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்தி பல இடங்களில் நம்மை கதற வைக்கிறார். மொட்ட ராஜேந்திரன், கல்கி ஆகியோர் வரும் காட்சிகள் கூட மேம்போக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. இந்த ரக ஆவிகளை விரட்டும் மந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மொட்ட ராஜேந்திரன் சொல்லும் இடம் மட்டும் லேசான சி புன்னகை உதட்டோரம் எட்டிப் பார்க்கிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒகே.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார் பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, முழுக்க முழுக்க நகைச்சுவை படம் தர முற்பட்டிருக்கிறார்.

எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இயக்குனர், அதற்காக காமெடியை நம்பாமல் காமெடி நடிகர்களை மட்டுமே நம்பியிருக்கிறார். அதுதான் பலவீனமாகி விட்டது.

Comments (0)
Add Comment