ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு ரசிகர்களை கவலைக் குள்ளாக்கி இருக்கிறது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், “ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம் திரையரங்குகளும், ‘பராசக்தி’ படத்துக்கு 40 சதவீதம் திரையரங்குகளும் ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 75 முதல் 80 சதவீதம் வரை பங்குத் தொகை கேட்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி திரையரங்குகள் நடத்தி சம்பளம் கொடுப்பது?
70 சதவீதம் வரை பங்குத் தொகை கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், 75 சதவீதம் வரை கேட்கிறார்கள். திருநெல்வேலியில் 80 சதவீதம் பங்குத் தொகை வேண்டும் என்கிறார்கள். அவர்கள் கேட்கிறபடி கொடுத்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.
கேரளாவில் 60 சதவீத பங்குத் தொகைக்குதான் ‘ஜனநாயகன்’ படத்தை திரையிட உள்ளார்கள். பாலக்காட்டில் 60 சதவீதம் பங்குத் தொகை, கோயம்புத்தூரில் 75 சதவீதம் பங்குத் தொகை என்கிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு பிரச்சினை.
‘கோட்’ படத்துக்கும் இதே 75 சதவீத பங்குத் தொகை கேட்டபோது பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வரை போராடிப் பார்த்தோம். ஆனால், ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானதால் வேறு வழியின்றி கொடுத்து விட்டோம்.
உடனே இதற்கு அரசியல் காரணம் இருக்கும் என்கிறார்கள். எங்களுக்கு எந்தவொரு மேலிடத்தில் இருந்தும் அழுத்தமில்லை. நியாயமான பங்குத் தொகை கேட்டால் உடனடியாக திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கும். இதனால் சில திரையரங்குகளில் ஜனநாயகனுக்கு பதிலாக ‘பராசக்தி’ படத்தினை போட்டு விட்டார்கள். ’பராசக்தி’ படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 50 சதவீதமும், ஒற்றை திரையரங்குகளுக்கு 60 முதல்
65 சதவீதமும் தான் கேட்கிறார்கள்.
‘ஜனநாயகன்’ படத்துக்கோ மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 60 சதவீதம், ஒற்றை திரையரங்குகளுக்கு 75 முதல் 80 சதவீதம் வரை கேட்கிறார்கள். இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகமாக கிடைப்பதில் சிரமம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.