கதை 2040-ல் நடக்கிறது. தொழில்நுட்பம் இன்னமும் அருகாமையில் வந்து விட்ட நிலையில் அன்றைய காதலுக்கும் ஒரு ஆப்பு வருகிறது, புதிதாக உருவாக்கப்பட்ட app வடிவில். இந்த app
காதலர்களை கண்காணிக்கிறது. அவர்கள் காதலின் உண்மைத் தன்மையை அது நிஜமா போலியா என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் இயந்திரத்தின் தவறால் பாதிக்கப்படும் ஒரு காதல் ஜோடி தான் கதையின் அடிநாதம்.
காதல் திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால்,
இனி எந்த காதலர்களுக்கும்
இப்படியோர் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு
பொருத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வதோடு, அவர்கள் இருவரில் யார் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள முடியும். அதோடு
24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும். இதனால், காதலர்களில் யார் ஒருவர் ஏமாற்றினாலும், அது மற்றவருக்கு தெரிந்து விடும். இந்த காதலுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு
காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடும் வாங்கிக் கொடுக்கிறது, இந்த செயலி.
இதனால் காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்பு பெற்று வரும் இந்த செயலியின் பயன்பாடு
நாயகி கிரித்தி ஷெட்டியையும் அதில் வாடிக்கையாளர் ஆக்கி விடுகிறது.
சிறு வயது முதலே ஸ்மார்ட் போனின் வழிகாட்டுதலின் மூலம் வளர்வதால், சமூக ஊடகங்களில் அதிக பார்வையாளர்களை பெறுவது அவர் கனவு. அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே
ஸ்மார்ட் போன்கள் மூலம் தங்களுக்கே தெரியாமல் தவறு செய்பவர்களை திருத்துவதற்காக பசுமை உலகம் என்ற பெயரில் தொழில் நுட்ப வசதிகள் இல்லாத அதே நேரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் சீமான். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன், தன் அப்பாவின் வழிகாட்டுதலின்படி செல்போன் பயன்படுத்தாத நபராக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கும் காதல் வருகிறது. ஒரு மழைப் பொழுதில் சாலையில் நாயகி கிரித்தி ஷெட்டியை பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுகிறார். அவருக்காக தன் அப்பாவுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன் வாங்குபவர், அதன் மூலம் எஸ் ஜே சூர்யா நடத்தும் செயலியில் தன்னை இணைத்துக் கொண்டு கிரித்தி ஷெட்டியுடன்
நட்பாக பழகுகிறார். அவர்களது நட்பு காதலாக மாறும்போது, எந்த செயலி அவர்களை சேர்த்து வைத்ததோ, அதே செயலி காதலன் பற்றி கொடுத்த தவறான தகவலால் கிரித்தி ஷெட்டி காதலை முறித்துக் கொள்கிறார்.
இதனால், கோபம் கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி மீதான தனது தீவிரக் காதலை தவறாக கணித்த செயலி போலியானது என்பதை நிரூபிக்க முடிவு செய்கிறார்.
ஆனால், தன் செயலியின் தகவல்கள் சரியானது என்று வாதிடும் எஸ்.ஜே.சூர்யா, 30 நாட்களுக்குள் கிரித்தி ஷெட்டிக்கு உன் மீது காதல் வர வைத்து விட்டால் , என் செயலி போலி என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார்.
அப்படி நடக்கவில்லை என்றால் என் செயலி சிறந்தது என்பதை ஏற்றுக்கொண்டு அதை உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதனுக்கு சவால் விடுகிறார்.
அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் பிரதீப் ரங்கநாதன், அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை எந்திரக் கணிப்பை வென்ற மனித மாண்பாக மாறாத காதலாக சொல்வதே இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.
நாயகனாக வரும் பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் தான் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு தனது தனித்துவ நடிப்பால் வலிமை சேர்க்கிறார். கண்டதும் காதல் என்றாலும், தன் காதலி மீது தான் வைத்திருக்கும் உண்மை அன்பை அவர் வெளிக்காட்டும் இடங்கள் அத்தனையும் அவர் நடிப்பில் காதல் ரசம். காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளில் உடல் மொழியுடன் இணைந்த அந்த நடிப்பு நவரசமாகிறது.
நாயகியாக வரும் கிரித்தி ஷெட்டி, அழகான காதலியாக மனதில் நிற்கிறார்.
சமூக வலைதள மோகம், தாய்ப் பாசத்திற்கான ஏக்கம் என நடிப்பின் எல்லா பரிமாணங்களையும் தன் கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துபவர், காதல் போர்ஷனில் வெளிப்படுத்துவது வேறு லெவல் நடிப்பு. நாயகனை காதலிக்கலாமா வேண்டாமா என்கிற அந்த தடுமாற்ற வினாடிகள் அவர் கண்களில் வெளிப் படுவது அத்தனை அழகு.
காதல் இன்சூரன்ஸ் கம்பெனி செயலியின் நிறுவனராக, மனித காதலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா. தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தந்து தன் கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறார். தன் செயலிக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் இடத்தில் ரசிக்க வைக்கிற நடிப்பை தந்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக அன்புக் கடல் கதாபாத்திரத்தில் சீமான், தன் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பில் நின்று போகிறார். செல்போன் இல்லாத அவரது உலகம் வரும் காலங்களிலாவது நிஜமாகவே நடந்து விடாதா என்ற ஏக்கம் மனதில் எட்டிப் பார்க்கிறது.
தோற்றத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் யோகி பாபுவுக்கு நடிப்பில் வித்தியாசம் காட்டும் எந்த காட்சியும் அமையவில்லை. நாயகிக்கு பக்கத்துணையாக இருப்பவர் என்ற நிலையோடு கடந்து போகிறார்.
முதல் முறையாக கவர்ச்சியான உடைகளோடு வலம் வரும் கெளரி கிஷன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத கேரக்டரில் வீண டிக்கப்பட்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாராவும், எஸ் ஜே சூர்யாவின் விசுவாச பிரஜையான ஆனந்த ராஜூம் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக எஜமான விசுவாசத்தில் நாயகனிடம் அடி வாங்கி அடி வாங்கி ரத்தம் சொட்டச் சொட்ட போராடும் இடம் ஆனந்தராஜ் நடிப்பில் புது கிரீடம்.
நாயகியின் அம்மாவாக மாளவிகா, சுனில் ரெட்டிக்கும்
பழுதில்லாத பாத்திரங்கள்.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு நிஜமாகவே அழகோவியம். ஒவ்வொரு பிரமாண்டமான காட்சிகளும் இவரது கேமராவில் இன்னும் பிரம்மாண்டமாக வெளிப்படுகிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்ட உணர்வுகளை தருகிறது. பின்னணி இசையிலும் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ்,
கலை இயக்குநர் கண்ணன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பிரவீன் ராஜா, ரினிபாந்த், ஜேகட் லீரிண்டியா, ஷங்ரீஹான் கே.எஸ்.
கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன், காதலை நவீன தொழில்நுட்ப கருவியால் அளவிட முடியுமா என்ற கேள்வியை கேட்டு அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்.
காதல் பிரிவு தரும் வலியையும், அந்த காதலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. காதல் உணர்வு எந்த எந்திரத்தாலும் அளவிட முடியாதது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் காட்சிப்படுத்தியதில் படம் கலர்ஃபுல்லாகி வருகிறது.
பிளஸ் : எந்த காலத்திலும் காதல், காதல் தான் என்ற கான்செப்ட்.
பிளாஷ்: காட்சி பிரம்மாண்டத்தில் கண்களை இமைக்கவும் விடாத ரவி வர்மாவின் கேமரா.
ரேட்டிங்: 6.2 /10.