விஜய் சேதுபதி-கத்ரினா கைப் நடிப்பில் பொங்கலுக்கு வரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ ‘பதல்பூர்’, ‘அந்தாதூன்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரினா கைப் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மெரி கிஸ்துமஸ்.’ இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ரமேஷ் தெளரானி, சஞ்சய் ரெளத்ரே, ஜெயா தெளராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு. ப்ரீத்தம் இசை..
பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய்சேதுபதி, கத்ரினா கைப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், நடிகர்சண்முகராஜன், கவிஞர் யுகபாரதி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,, “சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில நல்ல விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம். பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் ‘ஏக் ஹசீனா தி’. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார். நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன்.
அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.
அதன் பிறகு என்னை சந்தித்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய்யை தொடர்பு கொண்டு, ஜனவரி மாதம் என்னுடைய பிறந்த நாள் வருகிறது, அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர் சரி என்று ஒப்புக் கொண்டார். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். அவரது உதவியாளரும், கதாசிரியரும், படத் தொகுப்பாளருமான பூஜா மேடம் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.
கத்ரீனா கைப்பை நேரில் பார்த்ததும் அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட். இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயம் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.
இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.
நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘ஃபார்ஸி’ படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். எப்படி பேசி இருக்கிறேன் என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.
இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
நடிகை கத்ரீனா கைப் பேசுகையில், “சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் என்னுடைய தாயார் ஒன்பது வருடங்கள் மதுரையில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் மிகவும் உற்சாகமடைந்தேன். முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறோம். அதுவும் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்து உருவாக்கும் படத்தில் நடிக்கிறோம். இதற்கு முன் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
இந்தப் படத்திற்காக நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் விஜய் சேதுபதியும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார் அதில் ‘ரொம்ப கஷ்டமாக இருந்தது’ என்ற வார்த்தையை பேசுவேன். படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு நடிகை தீபா வெங்கட் உதவி செய்தார்.” என்றார்.
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது. மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது..! என்று சிந்தித்தேன். விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது.
இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே. என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.
நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகிறது. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.
மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார். என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார். விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்.” என்றார்.
