டியர் திரை விமர்சனம்

டேபிளில் இருக்கிற பென்சில் கீழே விழுந்தாலே உறக்கம் கலைந்து விடுகிற இளைஞன் அர்ஜுனுக்கு, படுக்கையறையே அதிர்கிற அளவுக்கு குறட்டை விடுகிற தீபிகா மனைவியாகிறாள். அவளது குறட்டையால் அர்ஜுனுக்கு முதலில் தூக்கம் அப்புறம் நிம்மதி அதற்கும் அப்புறம் அவன்பார்த்த நியூஸ் ரீடர் வேலை வரை போகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அர்ஜுன், விவாகரத்துக்காக கோர்ட்டை நாடுகிறான்.. தீபிகாவோ கணவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறாள். இணைந்தார்களா, பிரிந்தார்களா? என்பது சுவாரசிய கதைக்களம்.

கடந்தாண்டு வெளிவந்த ‘குட் நைட்’டுக்கும் இந்த படத்துக்கும் ‘குறட்டையால் கணவன் மனைவி உறவில் சிக்கல்’ என்பது மட்டுமே ஒற்றுமை மற்றபடி திரைக்கதையில் வித்தியாசம் காட்டி இயக்கி இருக்கிறார், ஆனந்த் ரவிச்சந்திரன்.

அர்ஜூனாக ஜீ.வி.பிரகாஷ். செய்தி வாசிப்பாளராக வரும் ஜீவி, குறட்டையால் தூங்காமலிருந்து மத்திய நிதியமைச்சரை பேட்டியெடுக்கும் வாய்ப்பை தவற விட்டபின் காட்டுகிற எரிச்சல், மனைவியைப் பிரிய முடிவெடுப்பதில் உறுதி, தன் தவறை உணர்கிறபோது ஏற்படுகிற வருத்தம் என அத்தனையையும் கச்சிதமான முகபாவங்கள் மூலம் ரசிகனுக்குள் கடத்தி விடுகிறார்.

தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் பெரும்பகுதியை தூக்கிச் சுமக்கிற வேலை அவருக்கு. சுலபமாகவே சுமக்கிறார். குறட்டையால் வாழ்க்கை கோர்ட் வரை வந்திருப்பது கண்டு உள்ளூர உடைந்து போகிற இடத்தில் நம் கண்களையும் குளமாக்கி விடுகிறார். அந்த நிலையிலும்கணவனிடம் காட்டும் நேசம், புகுந்த வீட்டாருடன் அன்பாகப் பழகும் விதம் என அத்தனையும் மனதுக்கு இதம்.

ஜீ.வி.பிரகாஷின் அண்ணனாக, ‘மிஸ்டர் பெர்பெக்டாக’ வரும் காளி வெங்கட்டுக்கு இது நடிப்பில் புது அத்தியாயம். மனைவி என்பவள் அடிமை, தம்பி என்பவன் நான் கைநீட்டுகிற இடத்தில் நிற்க வேண்டும் என்பது போன்ற கொள்கையில் வாழும் அந்த கேரக்டரில் இம்மி பிசகாமல் வாழ்ந்திருக்கிறார்..

அவரது மனைவியாக வரும் நந்தினி. இன்னொரு நடிப்பு ஆச்சரியம். சட்சட்டென மாறும் முகபாவங்களில் கணவனுக்கு பயந்த மனைவியை கண்முன் கொண்டு வருகிறார்..

சிங்கிள் பேரண்டாக இருந்து தனது ஆண் பிள்ளைகள் இருவரை வளர்த்து ஆளாக்கிய அம்மாவாக ரோகிணி, கதாநாயகியின் பெற்றோராக இளவரசு, கீதா கைலாசம், வழக்கறிஞராக படவா கோபி கதைக்கான களத்தில் பலமாகவே காலூன்றி நிற்கிறார்கள். தவறை உணர்ந்து வருந்தும் இடத்தில் அந்த அப்பா கேரக்டர் தலைவாசல்விஜய் நடிப்பில் தனித்து தெரிகிறது.

பாடல்களில் இதத்தையும் இனிமையையும் வழியவிட்டிருக்கிற ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரமசுகம்.

‘தம்பதிகளுக்குள் மனம் ஒத்துப்போனால் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை என்பதை சொன்ன விதத்தில் இந்த டியர், மனதுக்கு ரொம்பவே ‘டியரஸ்ட்’