உயிர் தமிழுக்கு திரை விமர்சனம்

உயிர் தமிழுக்கு என்கிற தலைப்பைப் பார்த்ததும் கதாநாயகன் தமிழ் மொழிக்காகப் போராடி உயிரைக் கொடுப்பாரோ என்று தோன்றும். நாயகியின் பெயர் தமிழ்ச்செல்வி. அதாவது சுருக்கமாக தமிழ். அவர் மீது உயிரையே வைத்திருக்கும் நாயகனின் கதை தான் இது.

முதல் காட்சியிலேயே ஆனந்தராஜ் காலையில் நடைப்பயிற்சி போகும்போது மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். அவர் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொருளாளர். அவரின் மகள் தான் நாயகி சாந்தினி. அவரைக் காதலிக்கிறார் அமீர். அவரோ எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தைச் சேர்ந்தவர். கட்சிப் பகைமையால் அமீர் தான் அந்தக் கொலையைச் செய்தார் என சந்தேகப்படுகிறார்கள்.தமிழ்ச்செல்வியான சாந்தினியும் இதை நம்பி அமீரை வெறுக்கிறார்.

இறுதியாக அமீர் தன் மீதான கொலைப்பழியை எதிர்கொண்டு அதிலிருந்து எப்படி மீள்கிறார்? சாந்தினியோடு மீண்டும் எப்படி கரம் கோர்க்கிறார் என்பது கலகல பாணியில் சொல்லப்பட்ட கதை.

இதுவரை புரட்சிகரமான வேடங்களில் நடித்திருக்கும் அமீர், முதல் முறையாக கமர்ஷியல் ஹீரோவாக முத்திரை பதித்திருக்கிறார். அவருக்கு காமெடியும் வரும் என்பது படத்தின் பிளஸ்.

எம்.ஜி.ஆர் பாண்டியனாக அறிமுகமாகி பிறகு மாவட்ட செயலாளராக உருவெடுக்கும் அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் கதாநாயகி உடனான காதல் வாழ்க்கை என இரண்டு தளங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே செய்து ரசிகர்களுக்கு கலகலப்பு விருந்து பரிமாறியிருக்கிறார், சூடாகவே.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சாந்தினி ஸ்ரீதரன் காதலிலும் மோதலிலுமாக நடிப்பில் டபுள் புரமோஷன் வாங்கி விடுகிறார்.

ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ரசனை.
தமிழக அரசியலில் நடந்த சில சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதம்பாவா, கதை சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்.
உயிர் தமிழுக்கு, கோடையில் கிடைத்த குற்றாலம்.
.