தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார் சசிகுமார். மனைவி ஷிவதா பிள்ளைகளுடனான சந்தோஷக் குடும்பம் அது. அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வரும் உன்னி முகுந்தனும் சசியும் உயிர்த் தோழர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, கோயிலில் அனாதையாக கிடந்த சிறுவன் சூரியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தன்னுடனே வைத்துக் கொள்கிறார் உன்னி. வளர்ந்த சூரி அந்த குடும்பத்தில் ஒருவனாகிறார்.
இந்நிலையில், அக்கிராமத்திலுள்ள கோம்பை அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சென்னையில் இருக்கிறது என்பதையும், அது பல கோடி ரூபாய் மதிப்புக்குப் போகும் என்பதையும் அறியும் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், அந்நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரிக்க நினைக்க…அமைச்சரின் இந்த பேராசை, ஒற்றுமையாக இருக்கும் ஆதி, கர்ணா, சொக்கன் ஆகியோரின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே ‘கருடன்’.
வெற்றிமாறன் கதைக்கு திரை வடிவம் தந்திருக்கிறார், துரை செந்தில்குமார். மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, காமெடி, துரோகம், திருப்பங்கள் என தொடக்கம் முதல் முடிவு வரை கதை சொன்ன விதத்தில் கருடனாக பறக்கிறது, படம்.
நன்றிக்கே உரித்தான அந்த சொக்கன் கேரக்டரில் சூரி அப்படி பொருந்திப் போகிறார். விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வில் கூனிக் குறுகுவது, நியாயத்துக்கும் – உறவுக்கும் இடையில் மருகுவது என நடிப்பில் புது பரிமாணம் காட்டியிருக்கிறார், சூரி.
உயிர் நண்பன் கேரக்டருக்கு சசிகுமார் தான் இப்போது வரை வந்து நிற்கிறார். இதிலும்.
சசியின் உற்ற நண்பனாக உன்னி முகுந்தன் பொருத்தமான தேர்வு. ஆனால் அவர் வில்லனாக மாற அழுத்தமான காரணங்கள் இல்லை. அது தான் அவர் இயல்பான குணம் என்றால் நண்பர்கள் இருவருக்கிடையே இவ்வளவு நாட்கள் நட்பு நீடித்திருக்க வாய்ப்பில்லை. உன்னியின் பிரச்சினை பணம் தான் என்றால் அதைத் தர சசிகுமார் முன்வரும்போது, ‘யாரும் எனக்கு பிச்சை போட வேண்டாம்’ என்று மறுத்து விட்டு, நண்பனையே கொன்று ஒரு சதிகாரனிடம் அதைப் பெற நினைப்பதில் அந்தக் கேரக்டரே அடிபட்டுப் போய் விடுகிறது. அதோடு உயிர் நண்பன் என்ற வார்த்தைக்கும் அர்த்தமில்லாது போய் விடுகிறது. படத்தில் டைரக்டரும் கதையாசிரியரும் கோட்டை விட்ட இடம் இது தான்.
படத்தின் ஜீவனான நடிப்பு சசிகுமாரின் இல்லத்தரசியாக வரும் ஷிவதாவிடம் பொங்கி வழிகிறது. வாஞ்சையான அன்பு அவர் கண்களில் இருந்தே வெளிப்படத் தொடங்கும் இடங்கள் அற்புதம். சமுத்திரக்கனி, மைம்கோபி, வடிவுக்கரசி பாத்திரச்சிறப்புக்கென்றே பிறந்த நட்சத்திரங்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஆ.வில்சன் – படத்தொகுப்பாளர் பிரதீப்.இ.ராகவ் கூட்டணி, வெற்றிக்கூட்டணியாகி இருக்கிறது.. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளை நெஞ்சாங்கூட்டுக்குள் இனிதே இடப்பெயர்ச்சி செய்து விடுகிறது.
சிறுவர்கள் வன்முறையில் இறங்குவதை வீரம் என்பதும், அதீத வன்முறையைப் பாசம் என்கிற பெயரில் நியாயப்படுத்துவதும் சீரியஸ் கதைக்குள் சின்னதாய் ஒரு போங்கு.
நன்றி , விசுவாசத்துக்கென அவதாரம் எடுத்த சொக்கன்கள் தான் கிராமத்து மண்ணின் பலம் என்பதை அழுத்தமாக சொன்ன விதத்தில் கவர்கிறான், இந்த கருடன்.