ஹிட் லிஸ்ட் திரை விமர்சனம்

வெற்றிப்பட இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட் லிஸ்ட். இப்படத்தை மற்றொரு வெற்றிகரமான இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கிறார் என்ற போதே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை படம் தக்க வைத்ததா?

பெயருக்கேற்றபடி ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்ததா?

ஈ, எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத விஜய் கனிஷ்கா ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். தாய் சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா என சின்ன, அழகான குடும்பம்.

ஒரு நாள் இவரது தாயையும் தங்கையையும் முகமூடி நபர் ஒருவர் கடத்தி விடுகிறார். தாய், தங்கையை கண்டுபிடிக்க விஜய் கனிஷ்காவுடன் இணைந்து போலீஸ் ஆபீசர் சரத்குமாரும் களத்தில் இறங்குகிறார்.

இப்போது முகமூடி மனிதன் நாயகனை தொடர்பு கொண்டு அந்த ஏரியாவின் பிரபல ரவுடியை கொலை செய்தால் தாய் தங்கையை விடுவிப்பதாக கூறுகிறான்.

இப்ப வில்லனை கொன்னாச்சு. ஆனால் சொன்னபடி தாயை விடுவிக்காமல் அரசு மருத்துவமனை டீனையும் கொன்றால் நிச்சயம் விடுதலை என்கிறான். அதுவும் ஆச்சு. இதன் பிறகாவது தன் தாய் மற்றும் தங்கையை முகமூடி மனிதனிடமிருந்து மீட்டாரா? அந்த முகமூடி மனிதனை போலீஸ் ஆபீசர் சரத்குமார் கண்டு பிடித்தாரா? என்பது பரபர திரைக்கதை.

கொரோனா காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன்.
படம் முழுக்க காப்பாற்றப்பட்ட சஸ்பென்ஸ் தான் படத்தின் ஒட்டுமொத்த ஜீவன். அந்த கொரோனா கால பிளாஷ்பேக் காட்சிகள் கண்ணில் ரத்தம் வர வைப்பவை. டாக்டராக வரும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு இது வாழ்நாள் பாத்திரம். உயிரைக் கொடுத்து நடித்து, நடிப்புக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் கனிஷ்கா அறிமுக நாயகன் என்று நம்ப முடியாதஅளவுக்கு ஆனந்தம்அழுகை கோபம் சோகம் , ஆவேசம் என எல்லா ஏரியாவிலும் இறங்கி அடித்திருக்கிறார். தமிழ் சினிமா இனி இவரை தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்.

போலீஸ் ஆபீசராக கச்சித நடிப்பில் சரத்குமார் கம்பீரம். படத்தின் இன்னொரு பலம் இவர்.
நாயகனின் தாயாக சித்தாரா, தங்கையாக அபி நட்சத்திரா, நண்பனாக பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, லதாராவ், பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா, வில்லன்கள் ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ மேனன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். அப்பாவாக வரும் சமுத்திரக்கனி சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பக்கபலம். குறிப்பாக சத்யாவின் பின்னணி இசை சிறப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக தந்த விதத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறது, படம்.