தி அக்காலி திரை விமர்சனம்

போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி ஜெயக்குமாருக்கு கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைக்கும் கும்பல் பற்றி ரகசிய தகவல் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அவர்கள் யார், எதற்காக அந்த வழிபாடு? என்பதை திகில் மயமாய் சொல்லியிருக்கிற படம். ‘அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவன் என்று ஒரு விளக்கம் கொடுத்து அடுத்த பாகத்துக்கும் தயாராகி இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் அமானுஷ்யமான முறையில் உயிரிழப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரத்துடன் தொடங்குகிறது, படம். எதற்காக இந்த அமானுஷ்யம், சாத்தான் வழிபாடு போன்ற விஷயங்கள் என விரியும்போது திரை த்ரில்லருக்கு தயாராகி விடுகிறது.

யல்பான போலீஸ் அதிகாரியாக ஜெயக்குமார் அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

நாசர், ‘தலைவாசல்’ விஜய், ஸ்வயம் சித்தா, வினோதினி எனத் துணை கதாபாத்திரங்களும் தங்கள் கேரக்டர்களில் நின்று நிலைக்கிறார்கள்.

கிரி முர்பியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த அமானுஷ்ய உலகத்துக்குள் கூட்டிப் போய் விடுகிறது. அனிஷ் மோகனின் இசை, தன் பங்குக்கு ‘திரில்’லூட்டுகிறது. கதையில் நிரவி வரும் நுணுக்கமான உணர்வுகளை முழுமையாக நமக்குள் கடத்தத் தவறி விடுகிற காட்சியமைப்புகளை மட்டும் இன்னும் சற்று எளிமைப் படுத்தி இருக்கலாம். இரண்டாம் பாகத்தில் இயக்குனர் முகமது ஆசிப் ஹமீது அதை செய்வார் என்று நம்புவோம்.