அந்தகன் திரை விமர்சனம்

பிரஷாந்த் பார்வைச் சவால் கொண்ட இளைஞர் . பியானோ வாசிப்பில் தேர்ந்த இசைக்கலைஞர்.. லண்டன் சென்று தன் திறமையைப் பட்டை தீட்டிக் கொண்டு ஒளிர வேண்டும் என்கிற கனவில் இருப்பவர். ஒரு சிறிய விபத்தில் பிரியா ஆனந்துடன் நட்பாகி, அவரது உணவகத்தில் பியானோ வாசிக்கிறார்.

பல பிரபலங்கள் அந்த உணவகத்துக்கு வருவது வழக்கம். அப்படி அங்கே வாடிக்கையாளராக வரும் நடிகர் கார்த்திக் பிரஷாந்த்தின் பினாயோ வாசிப்பில் நேசமாகிறார். தனது திருமண நாளை முன்னிட்டு தனது காதல் மனைவியின் முன்பு பியானோ வாசிக்க அழைக்கிறார்.அப்படிக் கார்த்திக் வீட்டுக்கு செல்லும் பிரஷாந்த் அங்கே எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். எதிர்காலத்தையே இருட்டாக்கி விடும் அந்த அபாயத்தில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? அவரது லண்டன் பியானோ கனவு என்னவானது என்பது பரபரப்புடன் கூடிய விறுவிறு திரைக்கதை.

இந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தா தூன்’ படத்தை தமிழுக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றியதில் படம் பட்டை தீட்டிய வைரமாகி விடுகிறது.

சற்றே இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள போதிலும் பிரஷாந்த் அப்படி யே இருக்கிறார். ஆனால் நடிப்பில் ஏகப்பட்ட மாற்றம். அந்த பார்வையில்லாத இளைஞன் கேரக்டரில் மீட்டர் தாண்டாத அந்த நடிப்பு, கதையின் மிகப் பெரும் பலமாகி விடுகிறது. கொலையை கண்ணால் பார்த்த நேரத்தில் அவரது நடிப்பும் உடல்மொழியும் அபாரம். சிம்ரனை எதிர்கொள்ளும் பிற்பகுதிக் காட்சிகள் அத்தனையும் ‘திடுக்’ ரகம். பிரியா ஆனந்த்துடனான அந்த அளவான காதலிலும் ரசிக்க வைக்கிறார்.
நடிகர் கார்த்திக் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். கார்த்திக்கின் இரண்டாவது மனைவியாக வரும் சிம்ரனுக்கு இனி் இதுபோல் ஒரு கேரக்டர் அமையுமா, தெரியாது. ஆனால் சிறந்த வில்லிக்கான தகுதித் தேர்வில் முன்னிற்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி அந்த மாறுபடட கேரக்டரிலும் முத்திரை பதித்து விடுகிறார்.

‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா – ராதிகா ஆப்தே இடையே ஒருவித இயல்புத்தன்மையுடன் கூடிய நட்பும், காதலும் இழையோடும். பிரசாந்த் – ப்ரியா ஆனந்திடம் அது கொஞ்சம் மிஸ்ஸிங்.

அதேசமயம் சில கதாபாத்திரங்கள் ஒரிஜினலை விட மிஞ்சி நிற்கின்றன. உதாரணம் ஊர்வசி கதாபாத்திரம். அவருக்குப் பக்கபலமாக வரும் யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் .கே . எஸ். ரவிக்குமார் ,வனிதா விஜயகுமார் , மனோபாலா பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்.

ரவி யாதவ்வின் கேமரா சஸ்பென்ஸ் காட்சிகளில் ஒரு கேரக்டராகவே மாறித்தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘என் காதலும்’ பாடல் நெஞ்சம் வரை காதலை கொண்டு செல்கிறது. ‘சந்திரனே சூரியனே’ மற்றும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா’ பாடல்கள் வரும் இடம் ஒருவித பரவசம் கலந்த சந்தோஷம்.

தியாகராஜன் இயக்கி இருக்கிறார். படத்தில் வரும் பாத்திரங்களைச் சுற்றி மூடப்பட்டுள்ள கதவுகளை ஒன்றன் பின் ஒன்றாக திகிலூட்டும் விதத்தில் திறக்கும் திரைக்கதையில், சுவாரஸ்யங்களை அள்ளித் தெளித்து ரசிகனை படத்தோடு ஒன்ற வைத்த விதத்தில் தேர்ந்த இயக்குனராக சிறப்பு மகுடம் சூட்டிக் கொள்கிறார்.