‘‘தமிழ் சினிமாவில் இயக்குனர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே…’’
நடிகர் சிவகார்த்திகேயசன் சூசகமான பேச்சு
நடிகர் சங்கத்துக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள விஷயம் உட்பட சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது இரு சங்கமும் பேச்சு வார்த்தை மூலம் சிக்கலை சீராக்கும் வேலை நடந்து வருகிறது. இதை கொட்டுக்காளி பட விழாவில் சூசகமாக தெரிவித்தார், நடிகர் சிவகார்த்திகேயன்.
தனது எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அவர் தயாரித்திருக்கும் படமே ‘கொட்டுக்காளி’. சூரி, அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ‘கூழாங்கல்’ புகழ் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார்.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்று வரும் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் முதலில் ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருந்தது. நான் அதிகம் சினிமாக்கள் அதிகம் பார்த்ததில்லை. அறிமுக இயக்குநர்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ராட்டர்டம் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் தேர்வாகும். முன்பு கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக இந்த விழாவில் விருது வாங்கி இருக்கிறார். அந்த விருதை ‘கூழாங்கல்’ படத்திற்காக வினோத்ராஜ் வாங்கினார் என கேள்விப்பட்ட போது எனக்கு புல்லரித்தது.
வினோத்ராஜை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவருடைய அடுத்த படத்தை நான் தயாரிப்பதாக சொன்னேன். இந்தப் படம் வெற்றியடைந்து நான் முதலீடு செய்தது போக எனக்கு லாபம் வந்தால், அதை முதலில் எடுத்து இயக்குநர் வினோத்தின் அடுத்த படத்திற்கு முன்பணமாகக் கொடுத்து விடுவேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் போன்ற இரண்டு இயக்குநர்களுக்கு படம் செய்ய முன்பணம் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக இதைப் பார்க்கிறேன்.
நான் காலேஜ் படிக்கும் போது அதிக சினிமா பார்ப்பதுண்டு. அப்போது பாலாஜி சக்திவேல், கெளதம் மேனன் எனப் பலரது படங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.. இவர்களுக்கான ட்ரிபியூட்டாக ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்கு இசை இல்லை என்று வினோத்ராஜ் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. சூரி, அன்னா படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ’விடுதலை’ படத்தை விட ‘கொட்டுக்காளி’ படத்தில் சூரியின் நடிப்பு நிச்சயம் ஒரு மார்க் அதிகம் வாங்கும் என நம்புகிறேன். ’விடுதலை2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ என இந்த வருடம் சூரிக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என அனைவரும் இந்தப் படத்தை இவ்வளவு பாராட்டி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களாவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் சூரி பேசுகையில், “நான் பல படங்களில் நடித்து பாராட்டுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த பாராட்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா செய்த புண்ணியம் தான் இப்படியான நல்ல இயக்குநர்களையும் ரசிகர்களையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த இயக்குநரது படத்திலேயே நான் நாயகன் ஆகியிருப்பதற்கு இறைவனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அமெரிக்காவுக்கு செல்வதற்காக விசாவுக்காக நான் காத்திருந்த ஒரு வாரத்தில் பயந்து விட்டேன். இந்தந்த கேள்விகள் கேட்பார்கள் இப்படி பதில் சொல்ல வேண்டும் என எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால், எனக்கு எல்லாமே பதட்டத்தில் மறந்து விட்டது. அதுபோலவே, இத்தனை இயக்குநர்கள் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பாத்தபோது எனக்கு பதட்டமாகி விட்டது. இப்படி ஒரு படத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், தம்பி சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அன்னா பென் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
இயக்குநர் வினோத்ராஜ் பேசுகையில், “எனக்கு ஆதரவு கொடுத்து வரும் எல்லோருக்குமே நன்றி. சிவகார்த்திகேயன் அண்ணனால் தான் படம் இவ்வளவு தூரம் வந்தது. என்னுடைய டீம் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
நடிகை அன்னா பென் பேசுகையில், “எனக்கு இப்படியான கதையைக் கொடுத்த இயக்குநர் வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “’கூழாங்கல்’ படத்தை விட இயக்குநர் வினோத்ராஜ் அதிக பாய்ச்சல் இதில் நிகழ்த்தி இருக்கிறார். உலகத்தின் பல்வேறு மொழி படங்களோடு போட்டியிட்டு வெற்றிப் பெற்ற வினோத்ராஜாவைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லாமல், தரமான படைப்பைக் கொடுக்க வேண்டும் என்பது இந்தப் படக்குழுவின் நோக்கமாக உள்ளது. உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமையாக இருக்கும். படத்தில் சூரி, அன்னா பென் நடிப்பு, உழைப்பைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், “’கொட்டுக்காளி’ திரைப்படம் மிகவும் யதார்த்தமானது. எந்தப் படத்திலும் பார்க்காத புது அனுபவத்தை வினோத்ராஜ் கொடுத்துள்ளார். ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என அவர்களாகவே நினைத்துக் கொண்டு செல்லும் பயணம் தான் ‘கொட்டுக்காளி’. உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பது தான் கதை. இது எல்லாமே நாம் பக்கத்தில் வாழ்வில் பார்த்த அனுபவம்தான். முந்தைய படங்களை விட சூரி சிறப்பாக நடித்துள்ளார். எல்லா நடிகர்களும் தங்களுடைய ஆத்ம திருப்திக்காக வினோத்ராஜூடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என சொல்வேன். அந்த அளவுக்கு கலை மீது பக்தி வைத்துள்ளார். இதைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் படக்குழுவுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “உலகத்தில் உள்ள எந்த ஒரு நல்ல படத்தோடு ஒப்பிடும்போதும் இந்தப் படத்தில் அதன் சாயல் இல்லை. வேறுமாதிரியாக உள்ளது. பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன் என எந்த இயக்குநரோடு வினோத்ராஜை ஒப்பிட வேண்டும் எனத் தெரியவில்லை. அவர் யார் மாதிரியும் இல்லாமல் தனித்துவமானவர். படத்தை அவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளார். சூரி நடிப்பில் ‘கருடன்’, ‘விடுதலை’ படங்கள் வெற்றி அடைந்தது. அதுபோலவே, ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன். அன்னாபென்னும் சிறப்பாக நடித்திருக்கிறார். உலக சினிமாவுக்கே அடையாளமாக இந்தப் படம் அமையும்.” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “’கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். இயக்குநர் வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தது போல இந்தப் படம் இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். அதற்கடுத்து வினோத்தின் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தை புரோமோட் செய்ய நிர்வாணமாக நடனம் ஆட வேண்டும் என்றாலும் தயார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. ’கொட்டுக்காளி’ படம் அவனுக்கு மற்றுமொரு குழந்தை. விஜய்சேதுபதியை வைத்து ‘டிரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். விஜய்சேதுபதியை அடுத்து சூரியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு விட்டேன். காமெடியனாக இருந்து அசுர நாயகனாக வளர்ந்து வரும் சூரியைப் பார்க்க பிரமிப்பாக உள்ளது.
படத்தில் கதாநாயகி அன்னா பென் ஒன்றரை வார்த்தை தான் பேசியிருப்பார். ஆனால், நிச்சயம் அவரது நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும். சத்தமே இல்லாமல் பெரிய அரசியல் கருத்துடன் ‘கொட்டுக்காளி’ உருவாகி இருக்கிறது” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “சர்வதேச தரத்தில் படம் உருவாக்கக்கூடிய நம்ம ஊர் பையன் தான் வினோத்ராஜ். சூரி போன்ற மெயின் ஸ்ட்ரீம் நடிகர் வினோத்ராஜ் படத்தில் நடிப்பது அவருக்கு ப்ளஸ். அதேசமயம், சவாலும் கூட. ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ என வினோத்தின் இரண்டு படங்களும் சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கான படம், அரசியல் கருத்துக்கள் பேசும் படம், இலக்கியம் பேசும் படம் என அத்தனையும் இருக்கிறது. சூரி, அன்னாபென், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார்கள். அந்தளவு நேர்மையான படைப்பு ‘கொட்டுக்காளி’” என்றார்.