யூடியுப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத் தளங்களில் பிரபலமாகத் துடிக்கும் சிலர், அதற்காக எந்த எல்லைக்கும் போகிறார்கள். பணத்தில் கொழிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்கள் நோக்கம்.
இவர்களின் வருமானத்துக்காக தன்மானம் இழக்கும் பெண்களின் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டு. அதையும் கூட அவர்களைப் பற்றி கொச்சையான புதிய கதை சொல்லி காசு பார்க்கும் ஜென்மம் இவர்கள்.
அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு
மேலோகம் அனுப்புகிறார் ஒருவர். அவர் யார் ? இவர்களால் அவர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்பதை சஸ்பென்ஸ் பின்னணியில் சொல்லும் திரைக்கதை படத்தை தொடக்கம் முதலே எதிர்பார்க்க வைத்து விடுகிறது. நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் வரும் மகேந்திரன் அறிமுக நாயகன் என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு காட்சிகளில் இயல்பாக வந்து போகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ராய் கொலையாளியி டம் சிக்கிக்
கொண்டு பயந்து நடுங்கும் காட்சிகளில்
யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தங்கை மீதான பாசத்தில் உருகும் அண்ணனாக நடிப்பிலும் கரை சேர் கிறார். தங்கைக்காக ஆயுதம் ஏந்தும் காட்சிகளில் கண்களில் தெறிக்கும் அந்த வெறித்தனம் அவர் போட்டிருக்கும் முகமூடியையும் தாண்டி தெரிகிறது. அவர் தங்கையாக வரும் பெண் இயல்பான நடிப்பில் நெகிழவைக்கிறார் பாசமிகு கிராமத்து அப்பாவாக
நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரியாக சேரன் ராஜ், போலீசாக சிசர் மனோகர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்தின் உயிரோட்டத்திற்கு உதவுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் இசையில் ‘கருப்பு’ பாடல் காட்சிக்கு வீரியம் சேர்க்கிறது. அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் இளசு களின் கொண்டாட்டம்.
ஒளிப்பதிவாளர் பாஸ்கரின் கேமரா காடுகளின் அழகை திகிலோடு காட்சிப்படுத்தி இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியாவின் அத்துமீறல்களை, அதனால் ஏற்படும் உயிரிழப்பை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, இவர்களை என்ன செய்தால் தகும் என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பி இருக்கிறார். சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை படத்தின் பலமாகி விடுகிறது. அண்ணன் – தங்கை பாசம் சொல்லும் அந்த பிளாஷ்பேக் நிஜமாகவே
உருக்கம்.
‘இரவின் விழிகள்’ என்றாலும் பார்வை தெளிவானது.
