ஐ பி எல் –திரை விமர்சனம்

போஸ் வெங்கட் மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று கடுமையாகத் தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து விடுகிறான். கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். அதற்குப் பிறகு பல ரகசியமான அரசியல் செயல்பாடுகள் நடந்தேறுகின்றன. அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை கடுமையாக துன்புறுத்தி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள்.
அந்த கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார்.

இளைஞனின் மர்ம மரணம், கிஷோர் மீது பொய் வழக்கு போன்றவற்றை அம்பலப்படுத்தி நீதியை நிலை நாட்ட நினைக்கும் வாசன் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? கிஷோரைக் காப்பாற்றினாரா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? என்பதை சொல்வதே இந்த ஐபிஎல்.
காவல் நிலையங்களில்
லாக்கப் மரணங்கள் சகஜமாகி விட்டன. அதை பின்புலமாக எடுத்துக் கொண்டு, கடந்த ஆட்சியில் தமிழகத்தை உலுக்கிய நிகழ்வுகள் இரண்டை சற்று கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் பொதுமக்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை இந்தப் படத்தில் காட்டி பாமர மக்களை பயமுறுத்தி உள்ளார்கள்.

டிடிஎஃப் வாசன் தான் நாயகன் என்றாலும் கிஷோர் தான் கதை நாயகனாக படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். பல இடங்களில் தனது பண்பட்ட நடிப்பால் மதிப்பெண்களை அள்ளுகிறார். அவர் போலீஸ் விசாரணையில் கொடுமைப்படுத்தப்படும் காட்சிகள் ரசிகர்கள் கண்களில் இருந்து கண்ணீரைப் பிழிந்து எடுக்கும் என்பது நிச்சயம். ரத்தம் சொட்ட சொட்ட அத்தனை அடி உதைகளையும் வாங்கிக்கொண்டவர், தன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு துடித்துப் போகிற இடம் இன்னும் ரணம்.

ஃபுட் டெலிவரி பாயாக வருகிறார் டிடிஎஃப் வாசன். புதியவரானாலும் காதல் காட்சிகளிலும் பாடல்களுக்கான நடனக் காட்சிகளிலும் தேறித் தெரிகிறார்.
ஒரு பைக் ரேஸ் சண்டைக் காட்சியிலும் அதிரடி காட்டியுள்ளார்.
கிஷோரின் மனைவியாக வருகிறார் அபிராமி. போலீஸ் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறார். போஸ்ட் வெங்கட் கொடூர குணம் கொண்ட போலீசாக வருகிறார் .சிங்கம்
புலி சில காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பை நிரூபிக்கிறார். எதிர்மறையான போலீஸ் எஸ்.பியாக ஹரிஷ் பெராடியும் நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் காவல்துறையின் இருவேறு முகங்களாக வெளிப்படுகிறார்கள்

முதல்வராக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். மேலும் படத்தில் இடம்பெறும் இளம் பெண் அரசியல் தலைவர் பாத்திரம் கடந்த கால அரசியலை நினைவூட்டி விடுகிறது.

படத்தில் எதிர்மறை அம்சங்கள் அதிகம். அதிலும் காவல்துறை கஸ்டடியில் போலீஸிடம் கிஷோர் படும் பாடு ரத்தக்கண்ணீர் வரவைக்கும். அஸ்வின் விநாயகமூர்த்தி
இசையும் எஸ் பிச்சுமணியின் ஒளிப்பதிவும் கதையோடு காட்சிகளின் வீரியத்தை அதிகப்படுத்தி விடுகிறது.
எழுதி இயக்கிய கருணாநிதி சுயநல அரசியல்வாதிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை கதைக்களம் ஆக்கியிருக்கிறார். காவல் நிலைய கொடுமைகள் கொடுமையின் உச்சம். கிஷோரின் வீட்டுக்கே சென்று போலீஸ் அதிகாரி ஜான் விஜய் நடத்தும் அதிரடி தர்பார் ‘அடப்பாவிகளா’ சொல்ல வைக்கிறது. நீதி பிழைக்கிற அந்த கிளைமாக்ஸ் மட்டும் ஆறுதல்.