கோடீஸ்வர தொழிலதிபர் சூர்யாவுக்கு அம்மா தான் எல்லாமே. அம்மாவின் ஆசையோ மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது. 40 தாண்டிய பிறகும் மகன் திருமணத்தை தவிர்த்தால் எந்த தாய்க்கு தான் கவலை வராது?
ஆனால் திருமணம் வேண்டாம் என்பதற்கு மகன் ஒரு காரணம் வைத்திருக்கிறான். அது தாய்க்கும் தெரியும்.
இத்தனைக்கும் மகன் சாதாரண நபர் இல்லை. பிரபல தொழிலதிபர் என்ற அந்தஸ்தையும் தாண்டி ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வாங்கி தந்தவர்.
ஒரு கட்டத்தில் மகனை வற்புறுத்த புதிய டெக்னிக்கை கையாளும் தாய், ‘உன்னோடு இந்த குடும்பத்தில் வாரிசு வேரற்று போகக்கூடாது’ என்று சொல்ல…
இம்முறை விளையாட்டுக்காக வெளிநாடு சென்று வரும் மகன், கையில் ஒரு வயது குழந்தையோடு திரும்புகிறான்.
குழந்தையுடன் வீடு திரும்பிய மகனை பார்த்த தாய்க்கு அதிர்ச்சி. அது வாடகைத் தாயின் மூலம் மகன் பெற்ற குழந்தை என்பது தெரிய வர இன்னும் அதிர்ச்சி.
ஆனாலும் பேரனின் அன்பு அந்த பாட்டியை கட்டிப் போடுகிறது.
இந்நிலையில் குழந்தையின் உயிருக்கு திடீரென்று ஆபத்து ஏற்பட… குழந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக வாடகைத் தாயை தேடி அமெரிக்கா செல்லும் சூர்யா, அந்தப் பெண் தன்னை விட 20 வயது குறைவான மமிதா பைஜு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைகிறார்.
குழந்தையின் நிலையை சொல்லி அவரை அழைக்கும் போது, பணத்திற்காக வாடகைத்தாயாக இருந்த மமிதா பைஜு, அதே பணத்திற்காக குழந்தையை காப்பாற்ற சம்மதித்து சூர்யாவுடன் இந்தியா வருகிறார்.
வந்த இடத்தில் அந்த குழந்தையின் அன்பு, குடும்பத்தினரின் அன்பு அவர் மனதை மடை மாற்றுகிறது.
நாளடைவில் தான் பெற்றெடுத்த குழந்தையுடன், அதன் தந்தையான சூர்யாவையும் காதலிக்க தொடங்குகிறார்.
ஆனால் இருவருக்கும் இடையிலான 20 வயது வித்தியாசத்தை காரணம் காட்டி மமிதா பைஜுவின் காதலை நிராகரிக்கும் சூர்யாவை மமிதாவின் அதீத அன்பு வென்றதா? என்பது மகிழ்வும் நெகிழ்வுமான கதைக் களம்.
ஏற்கனவே சூர்யா ஏன் திருமணத்தை தவிர்த்துக் கொண்டு வந்தார் என்பதற்கான கிளைக் கதையையும் ரசனைக்கு குறைவில்லாமல் தந்து இருக்கிறார்கள்.
அந்தக் கோடீஸ்வர விசுவநாத் கேரக்டரில் சூர்யா நடிப்பில் சூப்பர்யா. நடை உடை பாவனைகள் மூலம் அந்த கோடீஸ்வர விஸ்வநாத்தை கண் முன் கொண்டு வந்து விடுகிறார்.
இவருக்கும் அம்மா ராதிகாவுக்குமான அந்தப் புரிதல் அன்பு இவர்கள் வரும் காட்சிகள் தோறும் மேஜிக் செய்கிறது. குறிப்பாக அம்மாவின் இழப்பு தாங்காமல் உடைந்து அழும் காட்சியில் மனதை உலுக்கி விடுகிறார் சூர்யா.
நாயகியாக நடித்திருக்கும் மமிதா பைஜு, அந்த கேரக்டரில் அப்படி ஒரு மாயாஜாலம் நிகழ்த்துகிறார். சின்ன சின்ன இடங்களில் கூட அவரது முக பாவனைகள் அதியற்புதம். இவருக்கும் ராதிகாவுக்குமான அந்த கெமிஸ்ட்ரி இன்னும் அற்புதம்.
சூர்யாவின் அம்மாவாக வரும் ராதிகா அந்த அம்மா கேரக்டரை அழகுற செய்து இருக்கிறார். மகனை கண்டிக்க முடியாத அந்த பணக்கார அம்மாவை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார்.
ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ , மைம் கோபி, ஜார்ஜ் மரியான், சுதா, காளி வெங்கட், உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக கதைக் களத்தில் இயல்பாக கலந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கேமரா கதையின் பிரமாண்டத்தை காட்சிகளில் உணர வைக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் மனதை வருடிக் கொடுக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் வெங்கி அட்லூரி, திருமண உறவை தவிர்க்கப் பார்க்கும் ஒரு ஆண் பார்வையில் கதை சொல்லி இருக்கிறார். அதற்கு வலுவான பின்னணியும் வைத்திருக்கிறார்.
ஒரு குடும்பத் தலைவரின் இரண்டாவது மனைவிக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை பிற்பகுதியில் பெரும்பகுதி காட்சிகள் எடுத்துக் கொண்டாலும் அதையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்று விடுகிறார். கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான் என்றாலும், அதையும் எதிர்பார்க்காத கோணத்தில் சொல்லி தனது இயக்கத்துக்கே உரிய முத்திரை பதித்து விடுகிறார்.
உறவுகளில் சண்டை சகஜம். இதில் யார் முதலில் பேசுவது என்பது தான் இணைப்பை தள்ளிப் போடுகிறது என்று வருகிற கதைக்களம், ஊருக்கு பத்து பேரை திருத்தினாலும் ஆச்சரியம் இல்லை.
பிளஸ்: தெளிவாக சொல்லப்பட்ட திரைக்கதை.
பிளாஷ்: சூர்யா,ராதிகா, மமிதா பைஜு கேரக்டர்களும் அதை அவர்கள் கையாண்ட விதமும்.
ரேட்டிங்: 8.2/ 10.
