விக்ரம் பிரபுவின் 25 வது படமாக வெளியாகிறது ‘சிறை’.
கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவர் நடிக்கும் நான்காவது போலீஸ் வேடம். ஆனால் இந்த போலீஸ் வேடத்தில் அவரை ரொம்பவே ரசிக்க முடியும் காரணம் அந்த கேரக்டரின் வடிவமைப்பு அப்படி.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘சிறை’ படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், “’சிறை’ எனது 25 வது படமாக வெளியாவது மகிழ்ச்சி. உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் நான் போலீஸாக நடித்திருந்தாலும், என் தோற்றம் மற்றும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை பார்ப்பீர்கள்.
இயக்குநர் தமிழ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தான் இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து தான் இந்த படத்தில் நடித்தேன், அவர் சொன்னது போலவே படம் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர் சுரேஷ், தமிழை விட சீனியர். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட வருடங்களாக இணை இயக்குநராக பணியாற்றியவர். அவரது அனுபவம் இந்த கதையை மிக நேர்த்தியாக கையாள வைத்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித குமாரின் மகன் எல்.கே.அக்ஷய் குமார், நன்றாக நடித்திருக்கிறார். படத்திற்காக அதிகம் உழைத்திருக்கிறார். சில அனுபவங்களை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, இதை விட அதிகமாக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று கூறினேன். அவர் அறிமுக நடிகர் போல் அல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்றார்
தொடர்ந்து வெவ்வேறு கதைக்களங்களில் நடிப்பது ஏன் ?, என்ற கேள்வி வருகிறது, அதை மாற்றினால், அது உங்களுக்கு நன்றாக இருக்குமே, என்று சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும், அனைத்து கதைக்களங்களிலும் நடிக்க வேண்டும். காரணம், அனைத்தும் நடிப்பு தான், அனைத்தும் கதாபாத்திரங்கள் தான். அதனால், நான் வெவ்வேறு ஜானர்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதோடு, வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும், என்று முடிவு செய்து விட்டேன்.”