போர்த் ப்ளோர் — திரை விமர்சனம்

மும்பையில் பணியில் இருக்கிற ஆரி அர்ஜுனன் தனது காதலி அனுபமாவின் அவசர போன் அழைப்பில் சென்னை வருகிறார். காதலி கேட்டுக் கொண்டபடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்க்கச் செல்கிறார்.

அதற்கு பிறகு அனு தொடர்பில் வரவில்லை. அவரது போனும் இயங்கவில்லை. செங்கல்பட்டில் கிருஷ்ண மூர்த்தியை பார்க்க போனபோது அங்கே ஒரு கொலை நடக்கிறது. அந்த அதிர்ச்சியில் கிருஷ்ண மூர்த்தியை பார்க்க முடியாமல் போகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ராயல் டவுன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் நாலாவது மாடியில் சென்று தங்குகிறார் ஆரி.

ஆனால் அங்கே அவருக்குக் கெட்ட கனவுகள் வருகின்றன. அவரை யாரோ மாடியிலிருந்து தூக்கிப் போடுவது போல, அந்த குடியிருப்பில் பல கொலைகள் நடப்பது போல தொடர் கனவுகள் அவரை துரத்துகின்றன.

ஒரு கட்டத்தில் கனவில் பார்த்ததெல்லாம் உண்மைச்சம்பவம் போலவே நடக்கின்றன.

இது பற்றி ஆரி அங்குள்ளவர்களிடம் கூறியும் எடுபடவில்லை. கனவு பற்றி விசாரிப்பதற்காக மனநல மருத்துவரிடம் செல்கிறார். அவரோ, உங்களுக்கு வந்த சில கனவுகள் ஏற்கனவே நடந்தவையாக இருக்கலாம். சில கனவுகள் பிறகு நடப்பதை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார்.

மருத்துவர் சொன்னபடியே அடுத்தடுத்து சில அபாய நிகழ்வுகள் நடந்து விட… இந்த களேபரத்தில் , ஆரியின் காதலி என்னவானார் என்று அதிர்ச்சி செய்தியும் கிடைக்கிறது.

இத்தனை சம்பவங்களுக்கும் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் நோக்கம் தான் என்ன என்பது கிளைமாக்ஸ்.

நாயகனாக வரும் ஆரி அர்ஜுனனுக்கு அந்த ஐடி நிறுவன ஊழியருக்கான தோற்றம் உடல் மொழி அசலாக பொருந்துகிறது. போர்த் ப்ளோர் குடியிருப்பில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களில் திகி லுறும் போதும், தனது குழப்பத்தை எண்ணி அவர் கலங்கும் போதும், அன்புக் காதலிக்கு பிறந்த தன் மகளை நினைத்து உருகும் போதும் நடிப்பின் எல்லைகள் அவருக்கு அழகாக வசப்பட்டு விடுகிறது. தொலைந்து போன காதலியின் நிலை தெரிந்த நேரத்தில் அவரிடம் வெளிப்படும் நடிப்பு ஆசம்.

அவரது காதலியாக அனுபமா பாத்திரத்தில் வரும் நடிகை பவித்ராவின் நடிப்பிலும் பழுதில்லை.
ஆரியின் தோழியாக வரும் தீப்ஷிகா நடிக்க கிடைத்த குறைந்தபட்ச இடங்களிலும் நிறைவாக வந்து போகிறார்.

நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் பொருத்தமான பாத்திரங்களோடு பொருந்திப் போகிறார்கள்.

வில்லனாக வந்து தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை திரையில் நிறுவுகிறார் சுப்பிரமணிய சிவா.

திரைக்கதையின் வேகமான பயணத்தை தரண் குமாரின் பின்னணி இசையும் தன் பங்குக்கு தூக்கி நிறுத்துகிறது .

எழுதி இயக்கி இருக்கிறார், எல். ஆர். சுந்தரபாண்டியன்.

ஒரு அமானுஷ்யக் கதையில் காதல் , பிரிவு, தந்தை மகள் பாசம்,கனவின் விளைவுகள் போன்றவை சரிவிகித கலவையாக அமைந்து படத்தை எதிர்பார்ப்புக்கு உரியதாக்கி விடுகிறது. போர்த்
ப்ளோரை மிரட்சியுடன் காட்டும் லட்சுமணனின் கேமராவும் படத்தின் வெற்றியில் பங்கு போட்டுக் கொள்கிறது.

ரேட்டிங்: 5.2/10.