“தெலுங்கு படத்துக்கு போன பிறகு கொஞ்சம் சொகுசாகி விட்டேன்”

-- தடயம் பட விழாவில் நடிகர் சமுத்திரக்கனி

நவீன்குமார் பழனிவேல் இயக்கியுள்ள சீரிஸ் `தடயம்’. இதில் நாயகனாக சமுத்திரகனி நடிக்க, நாயகியாக ஷிவதா நடிக்கிறார். ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தர பாண்டியன், பிரேம், கொற்றவை படத்தின் ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.

இந்த சீரிஸ் பிப்ரவரி 27ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாயகன் சமுத்திரக்கனி பேசுகையில், “தடயம்’ குறுகிய காலத்தில் எடுத்து முடித்துவிட்டோம். இவ்வளவு வேலை பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. தெலுங்கு சினிமாவுக்கு சென்ற பின்னர் கொஞ்சம் சொகுசாகி விட்டேன். காலை 11 மணிக்கு ஹீரோ வந்த பின்னர் தான் என்னை கூப்பிடுவார்கள். எனவே 11 மணிக்கு தான் போவோம், அவர் 4 மணிக்கு கிளம்பி விட்டால் நம்மையும் அனுப்பி விடுவார்கள். இப்படி சொகுசாக இருந்தவனுக்கு இதில் புதிய அனுபவம் கிடைத்தது. காலை 8 மணிக்கு போனால் இரவு 2 மணி வரை படப்பிடிப்பு என்பது புதிதாக இருந்தது.

என்ன இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டால் அமைதியாக அப்படியே பார்ப்பார்களே தவிர, எதுவும் சொல்ல மாட்டார்கள். இது ஒரு அழகான பயணம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. டிசம்பரில் தொடங்கி பிப்ரவரிக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம். இந்தக் கதையை கௌஷிக் என்னிடம் 10 நிமிடங்கள் தான் கூறினார். அதிகாரம் எளியவர்களை எப்படி எல்லாம் காயப்படுத்துகிறது என்பதை சொல்ல வேண்டும் எனக் கூறினார். அடுத்த வாரமே படப்பிடிப்பை துவங்கினோம். இப்போது உங்கள் முன் ஒப்படைக்கிறோம்” என்றார்.