ஜி டி என் -திரை விமர்சனம்

19 ஆம் நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு இந்த ஜி டி நாயுடு. காலம் கடந்து இந்த 21ம் நூற்றாண்டிலும் பாமரர்களுக்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கும் அவரது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் காலம் கண்டடைந்த பொக்கிஷம்.

இந்த விஞ்ஞான மேதையை, சோதனைகளை கடந்த அவரது சாதனைகளை அள்ளிப் பருகும் அமுதமாக திரைக்கு தந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாறு பற்றிய பாடத்தை சேர்க்கலாமா? வேண்டாமா? என்கிற கல்வியாளர்கள் விவாதத்தில் இருந்து தொடங்குகிறது கதை.

1910-ம் ஆண்டு வெள்ளைக்கார ஹென்ரி ஆடம்ஸின் (காரல் ஆண்ட்ரூ ஹார்ட்டே) மோட்டார் சைக்கிளை மூன்று ஆண்டுகள் முயன்று அதன் விலையான 250 ரூபாயை சம்பாதித்து விலைக்கு வாங்குகிறார் ஜி டி நாயுடு.

அந்த வாகனத்தை வாங்கிய அவர் அது வேலை செய்யும் விதத்தை தெரிந்து கொள்ள அதை பிரித்துப் பார்த்து அது எப்படி வேலை செய்கிறது என்று கண்டறிகிறார். அதைப் போலவே மோட்டார் வாகனங்களை எப்படி உருவாக்கலாம் என்கிற ஆராய்ச்சியில் அவர் ஈடுபடத் தொடங்கும் இடத்தில் இருந்து தொடங்குகிறது படம்.

ஜி டி நாயுடு தொழிலதிபராகவும் விஞ்ஞானியாகவும் கோவையில் கொடிகட்டிப் பறக்கிறார். யுஎம்எஸ் எனும் பஸ் கம்பெனியை திறம்பட நடத்தும் அளவுக்கு உயர்கிறார்.

ஆனால், இவரது வளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு எரிச்சலை கொடுக்க, அநியாய வரி விதிப்பு மூலம் அவரை முடக்கி போட நினைக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு இங்குள்ள அதிகாரிகளும் இது விஷயத்தில் வெள்ளைக்காரர்களின் அடாவடி அரசியலையே பின்பற்றுகிறார்கள். அரசின் இந்த வரிவிதிப்பை ஏற்க மறுக்கும் ஜிடி நாயுடு, வரி கட்ட மறுக்க…

அதிகாரத்தின் முன் அறிவியல் விஞ்ஞானம் அதுவும் ஒரு தனிப்பட்ட சாதனையாளர் எதிர்த்து நிற்க முடியுமா?

அறிவை பயன்படுத்தி உழைத்து உருவாக்கிய சாம்ராஜ்யத்தையே கண் முன் பறிகொடுத்து நிற்க நேரிட, பதிலுக்கு அவர் என்ன செய்தார்?இந்தியாவின் எடிசன் என கொண்டாடப்பட்ட மாமேதையின் வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என விவாதம் நடத்தும் அளவுக்கு அவரது சாதனைக்குள் புகுந்த சோதனை என்ன?

கேள்விகளுக்கு விடையே இந்த கண் கண்ட சாதனை சரித்திரம். ஜிடி நாயுடுவாக மாதவன். ராக்கெட்ரி நாராயணன் நம்பியை நடிப்பில் நம் கண் முன் நிறுத்தியவர், ஜி டி நாயுடுவாகவும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

ஜிடி நாயுடுவின் 25 வயதில் இருந்து 75 வயது வரையிலான தோற்றத்துக்காக அவர் போட்ட உழைப்பும் மெனக்கெடலும் ஃபிரேமிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தனது கம்பீரமான உடல்மொழி மற்றும் எதார்த்தமான முகபாவனைகள் மூலம் ஜி.டி.நாயுடுவின் பாத்திரத்திற்குத் திரையில் நூறு சதவீத ஜீவன் கொடுத்ததில் நடிகர் மாதவன் திரையில் எந்த ஒரு இடத்திலும் காணப்படவில்லை. மாறாக ஜிடி நாயுடுவே வலம் வருகிறார், திரை முழுக்க.

மாதவனுக்கு பக்க பலமாக இருக்கும் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ் குறைவான இடங்களில் வந்தாலும் செம ஸ்கோர் செய்கிறார். நக்கல் நையாண்டிமாய் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி தூள் பறக்கிறது.

முதல் மனைவியாக நடித்த பிரியாமணி, 2வது மனைவியாக நடித்த துஷாரா விஜயன் எல்லாம் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.

வரி வசூல் செய்யும் அதிகாரியாக ஜெயராம், அந்த கேரக்டருக்கான கம்பீரத்தை நடிப்பில் நிலை நிறுத்துகிறார். நெகட்டிவ் ரோலில் வினய், நாயுடுவின் தாய் மாமாவாக தம்பி ராமையா, இளம் வயது நாயுடுவாக டிஜே அருணாசலம் , நாயுடு விஷயத்தில் வில்ல முகம் காட்டும் கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராம் உள்ளிட்டோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

1900 காலக்கட்டத்தை மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதில் புரொடக்‌ஷன் டிசைனர் சிரில் குருவிலா மற்றும் அந்த காலக்கட்டத்தை படம் பிடித்து தனது கேமரா மூலம் நம்மை டைம் டிராவல் செய்ய வைத்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் இருவரும் இந்த படத்தின் இரு பக்க தூண்கள்.
கோவிந்த் வசந்தா இசை படத்தின் இன்னொரு கூடுதல் பலம். இயக்கி இருக்கிறார்

ஜி டி நாயுடு ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை சந்திக்கும் காட்சி எல்லாம் திரைப்படத்தப்பட்ட விதம் நிஜமாகவே பிரமிப்பு.

ஒரு மிகப்பெரிய அறிவியல் மேதையின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையின் நிறைகளை மட்டும் காட்டாமல் அவரிடம் இருந்த சிற்சில குறைகளையும் சுட்டிக்காட்டிய விதத்தில் திரைக்கதை ரசிகனை ஈர்த்துக் கொள்கிறது. அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் நிஜமாகவே சூப்பரப்பு.

ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தாலும், இந்திய அரசு அவரை எந்தவிதத்திலும் அங்கீகரிக்காமல் இருந்ததோடு, அவரது கனவுகளை சிதைக்கும் செயல்களில் எப்படி ஈடுபட்டது, என்பதை தைரியமாக சொலியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், நாயுடுவை அவரது முதல் மனைவி பிரிவதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

பிளஸ்: ஜி டி நாயுடுவாக கூடு விட்டு கூடு பாய்ந்த மாதவன் நடிப்பு

பிளாஷ்: பயோபிக்கை கமர்சியல் ஆகவும் சொல்லலாம் என நிரூபித்த இயக்குனர்.

ரேட்டிங்: 8/ 10.