66/99 –திரை விமர்சனம்

திகில் கதைக்குள் தந்தை-மகள் பாசப்பிணைப்பை இணைப்பாக தந்திருக்கிறார்கள்.

ரக்ஷிதா மகாலட்சுமி – சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-ம் எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரக் ஷிதாவுக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிப்பதும், ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

66 ஆம் எண் வீட்டில் வசிக்கும் சபரி- ரக்ஷிதா தம்பதிகளில் கணவர் நல்லவர் இல்லை. பணத்திற்காக ரக்ஷி தாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போட, அதில் இருந்து ஒவ்வொரு முறையும்
ரக்ஷிதா தொடர்ந்து தப்பித்து வருகிறார். இதற்கிடையே, திடீரென்று இரவு நேரத்தில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை தனக்குள்ளாக உணரும் ரக்ஷிதா, அவரை குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சிக்கும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்து விட்டதும், 99-ம் எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது. அப்படியானால் ரக்ஷி தாவின் கண்களுக்கு மட்டும் ஏற்கனவே இறந்து போன ஸ்வேதா தெரிந்தது எப்படி?
இறந்து போன ஸ்வேதா எதற்காக ரக்ஷிதாவை வேண்டி விரும்பி சந்திக்கிறார் ? கேள்விகளுக்கு கொஞ்சம் திகில், நிறைய நேசம் தடவி பதில் தந்திருக்கிறார்கள்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும்
ரக்ஷிதா மகாலட்சுமி, தனக்குள் ஆவி புகுந்த பிறகு வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான நடிப்பு திகிலுடன் கவனிக்க வைக்கிறது.
மற்றொரு நாயகியாக வரும் ஸ்வேதா, தனக்கு தீங்கு
இழைத்தவரையும் மன்னிக்கும் மனம் கொண்டவராக இருக்கிறார்.
உயிர் போகும் நேரத்திலும் தனக்கு தீங்கிழைத்தவரை எக்காரணம் கொண்டும் தண்டிக்கக் கூடாது எனது தந்தையிடம் சத்தியம் வாங்கும் இடத்தில் அந்தக் காட்சியும் தந்தையின் பரிதவிப்பும் கண்களை குள மாக்குவது நிச்சயம்.
நாயகர்களாக நடித்திருக்கும் சபரி, ரோகிந்த் இருவரும் புதுமுகங்கள் என்றாலும், அமைதியான
வில்லத்தனத்தில் அதகளம் செய்கிறார்கள்.

ஜாவா சுந்தரேசன், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது காமெடி கடுப்ஸ் ரகம். பவன் கிருஷ்ணா
ஈவிரக்கம் இல்லாத வில்லனை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா வரும் கொஞ்ச நேரத்திலும் தனது அனுபவ நடிப்பால் மனதில் நிறைந்து போகிறார்.
ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜாவின் கேமரா அடுக்குமாடி குடியிருப்பை மிரட்சி யுடன் நம் கண்களுக்கு தருகிறது.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் எம்.எஸ்.மூர்த்தி, ஒரு வீடு, அதில் புதிதாக குடியேறுபவர்க
ளுக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் என்று திகில் படங்களுக்கே உரிய எதிர்பார்ப்பை கனகச்சிதமாக தந்து விடுகிறார். ஸ்வேதா யார் என்பதில் தொடங்கி கிளைமாக்ஸ் வரையிலான காட்சிகள் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய் விடுகின்றன.
இந்த விதத்தில் இந்த 66/99 நெஞ்சுக்குள் வீசும் நேசப் பூங்காற்று.

ரேட்டிங்: 5.3/ 10.