தனது தாயாரிடம் இசை கற்க வரும் நாயகி ஜியா சங்கரை தனது பத்து வயதில் இருந்தே கண்காணித்து வரும் மது மகேஷ், தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார். ஒரு கட்டத்தில் இதுவே காதல் ஆகிறது. அதாவது ஒரு தலைக் காதல் ஆகிறது.
ஜியா சங்கரோ அவரது இசை நண்பர் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். அவர் மூலம் உலக அளவில் சிறந்த பாடகியாக அறியப்பட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. ஆனால் இசை நண்பனின் காதல் பொய்யாகிப் போக…
இந்த நிலையில் ஜியா சங்கர் மறதி
நோயால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடுவார். இதனால், தான் யார் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகிறார் மதுமகேஷ்.
அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது?
இதற்கிடையில் பழைய காதலனும் இந்த காதல் களத்தில் இறங்குகிறான். முடிவு என்ன ஆகிறது என்பதை சொல்வதே இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.
மனதில் காதல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ஏக்கத்தோடு பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் மதுமகேஷ். இறுக்கமான முகம், அளந்து பேசும் வார்த்தை, நடவடிக்கைகளில் பொறுமை என்று அந்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கி நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு நடிப்பு இரண்டிலும் ஒரு சேர கவர்கிறார். தமிழ் சினிமாவுக்கு புது நல்வரவு. மறதி நோயால் தான் யார் என்பதையே மறந்து போகும் அந்த பதட்ட நிமிடங்களை இயல்பான நடிப்பால் நமக்குள் அற்புதமாக கடத்தி விடுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் சில் இவர் நடிப்பு வேறு லெவல்.
இன்னொரு நாயகனான அர்ஜுன் அசோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம். காதலியின் குடும்ப பின்னணி தெரிந்த பிறகு காதலை புதுப்பிக்க அவர் போராடும் காட்சிகள் அனைத்தும் அக்மார்க் ரகம்.
நாயகனுக்கு துணை நிற்கும் கேரக்டரில் வரும் எம்.எஸ்.பாஸ்கர், தன் அனுபவ நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை தாங்கிப் பிடிக்கிறார். முக்கிய கேரக்டரில் விஜி சந்திரசேகர், நாயகியின் தந்தையாக ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் நடிப்பும் நன்று.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து அழகான காட்சிப் பதிவு.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ரசனைப் பொக்கிஷம். பின்னணி இசை
காதலாய் கசிந்து உருகுகிறது.
இயக்குநர் விஜய், ‘காதலி ஒன்று காதல் இரண்டு’ என்ற கோணத்தில் கதை சொல்லி இருக்கிறார்.
மறதி நோய் நாயகியிடம் தன் காதலை கரை சேர்க்கத் துடிக்கும் நாயகன், காதலை இடம் மாற்றும் இன்னொரு நாயகன் என கதைக்களத்தை அவர் கையாண்ட விதம் நிச்சயம் திரைக்கு புதுசு.
நாயகி தன் மறதி நோயிலிருந்து விடுபட்டு உண்மை காதலுக்கு சிறப்பு சேர்க்கும் இடம்
நெகிழ்ச்சி என்றால், அதற்கும் அடுத்து ஒரு கனமான கிளைமாக்ஸ் வைத்து வைத்திருப்பது நிஜமாகவே அதிர்ச்சியோ அதிர்ச்சி. இந்த கவித்துவ முடிவுக்காக படத்துக்கு ‘யார் நீ’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.
ரேட்டிங்: 6.2 / 10.