லோகேஷ் கனகராஜ் தேர்ந்த இயக்குனர். இந்தப் படம் மூலம் தேர்ந்த நடிகராகவும் அடையாளம் பெறுகிறார். கதையின் நாயகன் பெயர் தேவராஜ். நாயகி பெயர் சந்திரா. இருவர் பெயரில் உள்ள முதல் ஆங்கில எழுத்தும் படத்தின் பெயராகி இருக்கிறது.
ரத்தமும் சதையுமான மனிதர்களை காட்சிப்படுத்துவதையே தனது திரை அடையாளமாக வைத்திருக்கும் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
அப்படியானால் படத்தில் ரத்தம் தெறிக்குமா, தெறிக்காதா? பல இடங்களில் அருவி போல் பொங்கி
வழிகிறது ரத்தம்.
வன்முறை கதைக்களம் என்றால் அதற்கு ஏற்ற கதை வேண்டுமே. அதையும் ரத்தம் சொட்ட சொட்ட தயார் செய்திருக்கிறார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு ஒருவரை அநியாயமாகக் கொலை செய்கிறார் ஒரு காவல்துறை கருப்பு ஆடு. அந்தக் கருப்பு ஆட்டை கபளீகரம் செய்கிறார் நாயகன். கொல்லப்பட்டது போலீஸ் அதிகாரி. காவல்துறை சும்மா விடுமா? தலைமறைவாகி விடும் நாயகனை வெறியுடன் தேடுகிறது.
இந்த தலைமறைவு வாழ்க்கையில் அடுத்த கட்டமாக ஒரு பாடகியைச் சந்திக்கும் நாயகன் அவருடன் நட்பு பாராட்டுகிறார். அந்த நட்பு அடுத்த கட்டம் வருவதற்குள் நாயகனை பொறி வைத்து பிடிக்கும் காவல்துறை, நாயகனின் நேசத்துக்குரிய அந்த பாடகியை கொன்று விடுகிறது. இம்முறையும் காவல்துறையிடம் இருந்து தப்பிக்கும் நாயகன், தன் வழி தப்பும் பயணத்தில் ஒரு பங்களாவில் சந்திரா என்ற ஒரு பாலியல் தொழிலாளியைச் சந்திக்கிறான். தனது அதிரடி நடவடிக்கை மூலம் அத்தனை பாலியல் தொழிலாளிகளையும் விடுவிக்கிறான்.
18 வருடம் அந்த பாலியல் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த சந்திரா, தன்னை மீட்டவனே இனி நம் வாழ்க்கை என்ற முடிவுக்கு வருகிறாள். நாயகனின் நாலு நண்பர்களில் ஒருத்தியாக தன்னையும்
அந்த கூட்டத்தில் இணைத்துக் கொள்கிறாள்.
நாயகனிடம் துப்பாக்கி சுட பயிற்சி எடுத்துக் கொள்ளும் சந்திரா, தன்னை முதன் முதலில் சீரழித்து இந்த தொழிலுக்கு வர காரணமாக இருந்த மருத்துவரை துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்து எமலோகம் அனுப்பி வைக்கிறாள்.
இப்போது காவல்துறையின் தேடுதல் பட்டியலில் நாயகன் அவன் நண்பர்கள் உட்பட சந்திராவும் இடம் பிடிக்கிறாள். இவர்கள் காவல்துறை கண்ணில் மண்ணை தூவி விட்டு ஆந்திராவில் செட்டிலாக முடிவு செய்ய… காவல்துறையோ அதற்குள் அவர்கள் கதையை முடிக்கத் துடிக்க… இவர்கள் தப்பினார்களா? சிக்கினார்களா? என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அறிமுகப்படம் என்பதால் எச்சரிக்கையாக இந்த கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்னும் கொள்கையை கொண்ட அந்த தேவராஜ் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துகிறார். வன்முறை களமாடும் இந்த கதைக்குள் அவருக்குள் முளை விடும் காதலையும் அழகாக வெளிப்படுத்துகிறார்.
பாலியல் தொழிலாளி சந்திரா மீது ஏற்பட்ட பரிவு நாட்பட நாட்பட காதலாகும் இடத்தையும் நடிப்பில் இயல்பாக கொண்டு வந்து விடுகிறார்.
பாடகி பார்வதியாக நடித்திருக்கும் சஞ்சனா வரும் காட்சிகள் கொஞ்சமே என்றாலும், நெஞ்சமதில் நீக்கமற நிறைந்து விடுகிறார். இன்னொரு நாயகி சந்திராவாக வரும் வாமிகா, தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கும் இடம் முதற்கொண்டு முடிவு வரை தன் இயல்பான நடிப்பால் நம் நெஞ்சுக்குள் இடம் பெயர்ந்து விடுகிறார்.
கேங் டீமின் தலைவராக தலைவாசல் விஜய், நாயகனின் அப்பாவாக கஸ்தூரிராஜா பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். சந்திரா மீது காமப் பார்வை வீசும் அந்த டிரைவர் தருவது அக்மார்க் அமர்க்கள நடிப்பய்யா.
முகேஷ்ஜியின் ஒளிப்பதிவு, ஹாலிவுட் தரத்தில் அமைந்து படத்தை பரபரவென கொண்டு போகிறது. இசையமைத்த அனிருத்தும் கதைக் களத்தோடு இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தி இருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அதிகாரம் அடக்குமுறைக்கு எதிராக வன்முறை சாட்டையை சுழற்றி இருக்கிறார், ஆவேசமாகவே.
அந்த ஆவேசத்தைக் காதால் கேட்கவோ,கற்பனை செய்து பார்க்கவோ கூட இதயம் தாங்காது எனும்போது அதை ரத்தம் சொட்டச் சொட்ட காட்சிகளாக்கி லப் டப்பை எகிற வைக்கிறார்.(யார் கண்டது…ஒருவேளை இதற்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருது கொடுத்தாலும் கொடுப்பார்கள்.)
பிளஸ்: கதைக்கேற்ற நாயகன் தேர்வு.
பிளாஷ்: நாயகனை வேட்டையாட துடிக்கும் அந்த போலீஸ் அதிகாரி கேரக்டர்.
ரேட்டிங்: 4.2 /10.
