அமரம் திரை விமர்சனம்

அமரம் என்றால் போர் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டவும் கூலிக்கு மாரடிக்கும் கொலையாளிகளாக மாற்றவும் ஒரு கூட்டம் செயல்படுகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறண்ட பழங்குடியின கிராமம் ஒன்றைச் சேர்ந்த நாயகன் ராஜன் தேஜேஷ்வர் இப்படி கூலிக்கு கொலை செய்யும் கூட்டத்தில் இடம் பெறுகிறார். பிரபல கல்லூரிக்குள் போதிய பாதுகாப்புடன் இருக்கும் புதிய மணமக்களை அத்தனை கட்டு காவல்களையும் உடைத்து பிணமாக்குகிறார்.

இன்னொரு அசைன்மெண்டில் பிரபலம் ஒருவரை அவருக்குள்ள பாதுகாப்பு வளையத்தை மீறி போட்டுத் தள்ளுகிறார். தன் கண் முன்னே தந்தையை கொலை செய்து தப்பியவனை தானே கொல்லத் துடிக்கிறார் அவரது மகள் ஐரா அகர்வால். பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு நமது நாயகனை கண்டு பிடிக்கிறார். அவரால் கொல்ல முடிந்ததா? என்பதை கொலை மற்றும் கொலை சார்ந்த கதைக் களமாக்கி கதை சொல்லி இருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகி ஐரா அகர்வாலின் துடிப்பான நடிப்பு படம் முழுக்க ஒரு வித வேகத்தை தக்க வைத்துக் கொள்கிறது. தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் வெறியோடு தேடி அலைவது, இறுதியில் அவன் கையில் கிடைத்தும் அவனைக் கொலை செய்ய முடியாமல் தவித்துப் பதறுவது என எமோஷனல் காட்சிகளில் அதற்கான நடிப்பும் அவருடன் இணைந்து கொள்கிறது.

அறிமுக நாயகன் ராஜன் தேஜஸ்வருக்கு கூலிக்கு கொலை செய்யும் இளைஞனாக முதல் படத்திலேயே ஒரு கனமான கதாபாத்திரம். அதை தனது நடிப்பில் அழகாக சுமந்து இருக்கிறார். கூலிக்காக கொலையும் செய்யும் அந்த பாத்திரத்தில் இறுகிய முகத்துடன் அளந்து பேசும் வார்த்தைகளுடன் மனசை அள்ளிக் கொள்கிறார்.

பழங்குடியின சமூகப் பெரியவராக வரும் ஜார்ஜ் மரியன் இயல்பான நடிப்பில் வசீகரிக்கிறார். பழங்குடி மக்களைக் கூலிப்படையாக மாற்றும் வில்லன் பாத்திரத்தில் சாய் தீனா நடிப்பையும் தாண்டி பயமுறுத்துகிறார்.

எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகி நீடு மற்றும் ஹரிஷ் பெராடி, கல்கி ராஜன், வாசுதேவன் முரளி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான நடிப்பை அளந்து கொடுத்து கதை ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். குறிப்பாக கல்கி ராஜன் மூணு பெண் களின் தந்தை என்ற சென்டிமென்ட் ஒரு கணம் மனதை
நெகிழ்த்தி விடுவது நிஜம்.

ஒளிப்பதிவாளர் பரத் குமாரின் கேமரா, கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களின் கடுமையான வறட்சியான நிலப்பரப்பை கதையின் தன்மைக்கு ஏற்ப காட்சிப் படுத்தி இருக்கிறது.

மிக்கி ஜெ .மேயர் இசையில் பாடல்கள் மலைத் தேனாக இனிக்க, பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப களமாடி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் அருள் கிருஷ்ணா, செம்மரம் வெட்டுபவர்கள் மற்றும் கூலிப்படையாக செயல்படுகிறவர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன ?, என்பதை டீட்டெய்லாக சொல்லி முதல் பாதி படத்தை வேகமாக நகர்த்தி செல்லும் இயக்குனர், இரண்டாம் பாதியில் ஆபத்தில் இருக்கும் நாயகியை காப்பாற்றும் நாயகனின் உணர்ச்சிமிகு போராட்டத்தை சொல்லி ரசிக மனதுக்கு நெருக்கமாகி விடுகிறார்.

எதிர்பார்த்த கிளைமாக்ஸ் என்றாலும், அதை காட்சிப்படுத்திய உதயத்திலும் இயக்குனர் தேர்ந்து தெரிகிறார்.

பிளஸ்: எடுத்துக்கொண்ட கதையிலிருந்து இம்மியும் மாறாத களம்.
பிளாஷ்: காட்சிகளை நமக்குள் நெருக்கமாக்கும் ஒளிப்பதிவு

ரேட்டிங்: 5/10.