ஹை திரை விமர்சனம்

நாயகன் கவினுக்கு தன் பெற்றோர் போல் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் காதல் வசப்படுவேனா என்கிறது. உறவுக்கார பெண் கூட, உன் மீது அன்பு உண்டு. ஆனால் சத்தியமாய் காதல் மட்டும் இல்லை என்று கைவிரித்து விடுகிறாள். இதனால் கடிதம் எழுதி வைத்துவிட்டு நம்ம நாயகன் வீட்டை விட்டு எஸ்கேப்.

இது நாயகன் கதை என்றால், நம்ம நாயகி வீட்டை விட்டு வெளியேறிய கதை வேறு.

குடிகார அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நாயகிக்கு அப்பா வாங்கிய கடனுக்காக கட்டாய திருமணம். லட்சங்களில் கடன் கொடுத்தவன் தான் மாப்பிள்ளை. அவன் ரவுடியும் கூட. விடிந்தால் திருமணம் என்ற இக்கட்டான சூழலில் இரவோடு இரவாக அவளும் எஸ்கேப்.

வீட்டை விட்டு ஓடி வந்த இந்த இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகும் வாய்ப்பு அமைகிறது. அழகும் போராட்ட குணமும் ஒருங்கே அமையப் பெற்ற நாயகி மீது நாயகனுக்கு காதல் அரும்ப, அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திருக்கிறான். ஒரு நாள் வெளிப்படையாக, எனக்கு காதல் திருமணத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்று நாயகி சொல்லி, காதல் சொல்ல காத்திருந்த அவன் மனசை போட்டு உடைக்கிறாள்.

இதற்குப் பிறகும் நாயகன் தன் காதலை சொல்வானா என்ன…

ஆனால் சொல்கிறான். அது எப்போது, எந்த சூழலில் என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கிளைமாக்ஸ்.

கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் மீதான தன் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறார். நாயகி நயன்தாராவிடம் எப்போது காதலை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை தனது நடிப்பால் நமக்குள் கடத்தி விடுகிறார்.

நாயகி நயன்தாரா, பளிச்சென்று இருக்கிறார். காதல் மீது நம்பிக்கை இல்லை. திருமணத்தின் மீது நாட்டம் இல்லை. காதல் மணம் புரிந்த தந்தையைப் பிரிந்து தலைமறைவான தாய், அதனால் குடிக்கு அடிமையான அப்பா என கசப்பான அவரது வாழ்க்கை வட்டம் தந்த பாடம், காதலை அவருக்கு காத தூரம் ஆக்கி விடுகிறது. அதை நாயகனுடா ன தொடர் சந்திப்பில் அழகாக பிரதிபலித்து இருக்கிறார். கிளைமாக்ஸ் வரை காதல் அவரிடம் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை தனது நடிப்பால் ரசிகர்களுக்கும் திகட்ட திகட்ட கொடுக்கிறார். வெளிநாட்டில் ஒரு நல்ல வேலையில் செட்டில் ஆகி சம்பாதித்து சொந்த ஊரில் கௌரவமாக மீதி நாட்களை கழிக்க வேண்டும் என்ற தனது கனவை நட்புக்குரிய நாயகனிடமே சொல்வதெல்லாம் நடிப்பில் வேறு லெவல்.

மகன் மீது பாசத்தை கொட்டும் அம்மாவாக ராதிகா, அதே மகனுக்கு பளார் விடும் இடத்தில் நடிப்பரசி, இந்த கலையரசி. அப்பாவாக கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக பிரபு, இருவருமே நடிப்புச் சிறப்பால் தங்கள் பாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் சுஹாசினி மணிரத்னம்.

சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக சத்யன் திடீர் வில்ல அவதாரம் எடுக்கும் இடத்தில் நகைச்சுவை எகிறி அடிக்கிறது. நாயகனின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர் அவ்வப்போது வெடிக்கும் அத்தனையும் காமெடி பட்டாசு .

விடிவி கணேஷ், பெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் நடிக்க தெரிந்த நட்சத்திரங்கள் என்பதை தங்கள் திரை இருப்புகளில் நிரூபிக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லாவின் கேமரா நயன்தாராவை பளிச்சென்று காட்ட அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட ரகம்.

காதல் பின்னணியில் ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை அழகியலுடன் காட்சிப் படுத்தி தன் திரை வரவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன். பெரிதான திருப்பங்கள் இல்லை. எளிமையான காதல் கதையை, இயல்பான திரைக்கதையோடு இறுதிவரை எதிர்பார்ப்பு குறையாமல் சொல்லி இருக்கிறார். அதுவே ரசிக கவனத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது.

பிளஸ்: நாயகன் நாயகி இடையே காதல் ஆடும் அழகான கண்ணா மூச்சு.

பிளாஷ் : சின்ன கிரவுண்ட் தான் என்றாலும் அதற்குள் இயக்குனர் ஆடிய இதமான காதல் ஆட்டம்.

ரேட்டிங்: 7.2/10.