1947-ஆம் ஆண்டு, போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் இருந்து கதையை தொடங்குகிறார்கள்.அங்கு போதைப்பொருள் தொழிலின் சக்கரவர்த்தியாக இருப்பவர் சல்வடோர். அவரிடம் பணி புரியும் கங்கா (நயன்தாரா) மற்றும் ராயா (யஷ்) உடன்பிறப்புகள். சகோதரி மீது அதிக பாசம் வைத்துள்ள ராயா, சல்வடோரின் பார்வையில் ‘வச்ச குறி தப்பாத ஒரு மாவீரன்.’ தொழிலில் அவனது துணிச்சல் மிக்க நடவடிக்கையே தாதா சல்வடோ ருக்கு தன் மகள் ரெபெக்காவை (தாரா சுதாரியா) திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு போகிறது.
இந்த சூழலில் ராயாவின் வாழ்க்கையில் சர்க்கஸ் அழகி நாடியா (கியாரா அத்வானி) நுழைகிறார். அவரது ஈர்ப்பில் விழும் ராயா, ரெபெக்காவை விட்டுவிட்டு சுற்றுவதை ரெபேக்காவின் தந்தையும் தாதாவுமான சல்வடோரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரெபெக்காவும் ராயாவை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவரை அடைய வேண்டுமென்றால் மற்றொருவரை இழக்க வேண்டும் என்ற நிலை வரும்போது ராயா எதை இழந்து எதைப் பெற்றான்? என்பதுகதைக் களம்.
இயக்குனர் கீது மோகன்தாஸ் இதுவரை இயக்கிய படங்களில் மென்மையான அணுகுமுறை அதுவும் உண்மையாக இருக்கும். இந்த படத்திலோ வன்முறையை கதைக்களமாக எடுத்துக்கொண்டு காட்சிக்கு காட்சி ரத்தம் பார்த்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிக்குள் கொஞ்சூண்டு தாதா கதையையும் வைத்து இருக்கிறார்.
ஒரு படம் இந்த திசையில்தான் நகரப் போகிறது என்பதை 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களுக்கு தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்பதே திரைக்கதையின் சூட்சுமம். சினிமாவின் எழுதப்படாத விதியும் கூட. ஆனால், படத்தின் இடைவேளை வரை இது மாதிரி எந்த அதிசயமும் நடந்து விடவில்லை. வருகிறார்கள் போகிறார்கள். கத்திகளும், தோட்டாக்களும் சரமாரியாக பாய்கிறது. யார் யாரை கொல்கிறார்கள், அவர்களுக்குள் என்ன பகை என்பதை தெரிந்து கொள்வதிலேயே நேரம் போய்விடுகிறது.
இடைவேளைக்குப் பின் அந்த அப்பா மகன் சென்டிமென்ட் உட்புகுந்து ஓரளவு கதையை காப்பாற்றுகிறது.
‘கே.ஜி.எஃப்’ படத்திலுமே அதீத வன்முறை, ஓவர் பில்டப், அடுத்தடுத்த சண்டைக் காட்சிகள் என இதில் உள்ள அனைத்தும் உண்டு. ஆனால் அந்தப் படத்தில் அவற்றை இணைக்கக் கூடிய ஒரு நேர்த்தியான திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த படத்தில் காரணங்கள் அனைத்தும் சாதா’ரணம்.’ திரைக்கதையில் அதை பெரிய ரணமாக்கி விட்டார்கள்.
அதனாலேயே நாயகன் உள்ளிட்ட அத்தனை பேரும் உழைப்பும் விழலுக்கு இறைத்த
நீராகி விட்டது.
கலை இயக்குனர் , இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவு இயக்குனர் உள்ளிட்ட அத்தனை பேரும் செய்து காட்டிய பிரமாண்டம் மேகம் மறைத்த நிலவாகி விட்டது.
இயக்குனர் கீது மோகன் தாசுக்கு: பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
