ஒன்ஸ்மோர் -திரை விமர்சனம்

கல்லூரி பருவத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சிரிக்கவும் மறந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடைப்பிணம் போல் வாழ்ந்து வரும் ரகுவை மீண்டும் ஒரு காதல் தேடி வருகிறது, அஞ்சலி வடிவில்.
அஞ்சலியும் அவன் படித்த அதே கல்லூரியில் எட்டு வருடங்களுக்கு முன்பு படித்தவள் தான்.

அவர்களுக்குள் போதிய அறிமுகம் இல்லை என்றாலும், காரில் போகும்போது பஸ் நிறுத்தத்தில் நின்ற அவனை அடையாளம் கண்டு . தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். அவன் மறுத்தும் காரில் ஏற்றி அவன் வீட்டில் கொண்டு விடுகிறாள்.

அந்த அறிமுக படலத்தை தொடர்ந்து அவன் இன்னும் பேச்சிலர் என்று தெரிய வர, ஐ லவ் யூ சொல்கிறாள்.

அவனோ காதலுக்கு இனி என் இதயத்தில் இடம் இல்லை என்கிறான்.

ஆனால் அஞ்சலி விடுவதாக இல்லை. அடுத்தடுத்த சந்திப்புகளில் அவன் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்து திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள். நிச்சயதார்த்தம் முடிந்து இதோ விடிந்தால் திருமணம்.

நிச்சயதார்த்தத்தின் போது ரகுவின் முன்னாள் காதலியிடம் இருந்து போன். உடனே உன்னை பார்த்தாக வேண்டும் என்கிறாள். அவள் வரச் சொன்ன இடத்தில் இதோ இப்போது அவர்கள் சந்திப்பு. உன்னை பிரிந்தது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. நீ இல்லாமல் இனி நான் இல்லை. மறுபடியும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என்று கண்ணீர் மல்க அவள் சொல்லி முடிக்க… தடுமாற்ற நிலையில் ரகு.

இனி நடப்பது அதாவது நடக்கப்போவது விடிந்தால் அஞ்சலியுடன் திருமணமா? அல்லது முன்னாள் காதலி இந்திராவுடனான புதிய காதல் பயணமா? ரகு என்ன முடிவெடுக்கிறான் என்பது கிளைமாக்ஸ்.

ரகுவாக அர்ஜுன் தாஸ். காதல் தோல்வியில் பாதிப்புக்குள்ள கல்லூரி மாணவனை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். எதற்காக இந்த பிரேக் அப் என்று நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப காதலியிடம் கேட்கும் இடத்தில் காதலில் தோற்று நடிப்பில் ஜெயிக்கிறார்.

கல்லூரி கலையரங்கில் இந்திராவை சந்திக்கும் காட்சியில் நிஜமாகவே பொங்கி வழிகிறது காதல்.

அர்ஜுன்தாசை துரத்தி துரத்தி காதலிக்கும் துள்ளலும் துடிப்புமான துறுதுறு அஞ்சலி கேரக்டரில் அதிதி சங்கர், நடிப்பில் கூடுதலாக நான்கு படி ஏறி இருக்கிறார். படத்தின் கலகலப்பு ஏரியாவே இவர் தான். விடிந்தால் திருமணம் என்ற நிலையில் அவர் எடுக்கும் அந்த முடிவு, காதல் கவித்துவம்.

இன்னொரு நாயகியாக இந்திரா கேரக்டரில் நடித்திருக்கும் சோனா ஒலிக்கல் அழகான காதல் தேவதையாக வந்து மனதில் நிறைகிறார். காதலனிடம் பிரேக் அப் சொல்லும் இடத்தில், அவர் நடிப்பில் வெளிப்படுவது இன்னொரு முகம்.

சர்ச் ஃபாதராக ஜென்சன் , மருத்துவராக தேவதர்ஷினி தேர்ந்த நடிப்பில் வரும் தெரிந்த முகங்கள்.
டிராவிட் செல்வம்,அனுஷா பிரபு, ஜகபர்,மோனிஷ் எலமாரன், நாயகனின் அப்பா அம்மாவாக தயாளன்,ரமா ஏனைய பாத்திரங்களில் நிரம்பி நிற்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வ நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. படத்தில் இன்னொரு நாயகனாகவே வலம் வருகிறது இசை. அத்தனை பாடல்களும் காதுக்குள் தேன். கேஷாம் அப்துல் வகாப் வழங்கிய இந்த இசைக் கொண்டாட்டம், திரையரங்கம் வந்து அனுபவித்து உணர வேண்டிய ஒன்று எழுதி இயக்கியிருக்கிறார், விக்னேஷ் ஸ்ரீகாந்த். முக்கோண காதல் கதையில் மூன்று முடிச்சு யாருக்கு என்ற அந்த சஸ்பென்ஸ் இன்னும் கூட தெளிவாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதுபோல் பிரேக் அப்புக்கு காதலி சொல்லும் காரணம் ரொம்பவே பச்ச புள்ள தனமா இருக்கு.

திடீர் திருப்பம், திடுக்கிடும் திருப்பம் இதெல்லாம் இல்லாமல் இருந்தும் படம் பார்க்கும்படி இருக்கு என்பதை மட்டும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும்.

பிளஸ்: படத்துக்கு ஜீவனான அஞ்சலி கேரக்டர்.

பிளாஷ்: படத்துக்கு வில்லன் இல்லையென்பது படம் முடிந்த பிறகு நினைவுக்கு வருவது.

ரேட்டிங்: 6.8/10.