வித்தியாசமான முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிற நாயகனும் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுமாய் சுறுசுறு கதைப்பயணமே இந்த லாக்கர்.
சொகுசாய் வாழ்வதற்கு ஆசைப்படும் ஹீரோ நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடிக்கிறான். அவனுக்கு ஒரு காதலி வாய்க்கிறாள். காதலன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தெரிந்து கொள்பவள் அவனை வெறுக்கிறாள். காதலியின்அன்பை மீண்டும் பெற அவன் திருந்துகிறான்.
ஒருகட்டத்தில் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வெறுத்த அதே காதலி, அதே வழியில் சம்பாதிக்க காதலனைத் தூண்டுகிறாள். பணம் பறிக்க ஒருவரை குறிவைத்து அதற்காக ஸ்கெட்ச் வரை போட்டு தருகிறாள்.
காதலியின் மன மாற்றத்துக்கு காரணம் என்ன? அந்த ஸ்கெட்ச்சை செயல்படுத்தும்போது அவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன? என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
முதல்பாதியை விடஇரண்டாவது பாதி சஸ்பென்ஸ் திரில்லராய் வேகம் பிடிக்கிறது.
நாயகன் விக்னேஷ் சண்முகம் காதலின் பிரிவை சொல்லும் போது தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார். நாயகி நிரஞ்சனி அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் நவரசம் காட்டுகிறார். இக்கட்டான சூழலில் காதலுக்கு துரோகம் செய்யும் இடத்தில் இவர் நடிப்பும் பரிதவிப்பும் வேறு லெவல்.
அறிமுக இசை அமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையில் ‘வா பறப்போம்’ சுகராகம்.
திரில்லர் பின்னணியில் கதை, அதற்குள் ஒரு காதல், நம்பிக்கை துரோகம் என கலந்த கட்டியதில் இந்த லாக்கர் நம் மனதையும் சேர்த்து பூட்டிக் கொள்கிறது.
