கான்ஜூரிங் கண்ணப்பன் திரை விமர்சனம்

கேம் டிசைனராக தன் கேரியரைத் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சதீஷுக்கு அவரது வீட்டின் கிணற்றிலிருந்து வினோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் அவர் பறித்து விட… அதன்பிறகு அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் துரத்தப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற அளவுக்கு நிலைமை விபரீதம் ஆகிறது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர், சதீஷுக்கு மருத்துவம் பார்த்த ரெடின் கிங்ஸ்லி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் என அனைவரும் அந்த இறகினை அடுத்தடுத்து பறித்து ஆவிக்கனவில் ஒன்றாகப் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த வினோதமான பொருளின் பின்னணி என்ன? பேய்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கனவிலிருந்து மீண்டார்களா ? போன்ற கேள்விகளுக்கான பதிலை பேன்டஸி ப்ளஸ் காமெடி பின்னணியில் கொடுத்திருப்பதே இந்த ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’.

சந்தானம் வரிசையில் பேய் பட ஹீரோவாக வந்திருக்கிறார் சதீஷ். ரெஜினா பேய் ஓட்டுபவராக வந்து பேய்களை விட நம்மை அதிகம் பய முறுத்தி வைக்கிறார். படத்தின் சிரிப்புச்சரவெடி வரிசையில் வி.டி.வி. கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் என கலகல பட்டாசுகள் அதிகம்.

யுவாவின் ஒளிப்பதிவு ஒரு பேய்கள் வாழும் கனவு உலகத்தை கண்களுக்குள் நிறுத்தி விடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் இன்னொரு பலம்.

பொம்மைக்குள் பேய், டிவிக்குள் பேய் வரிசையில் இந்த கனவுப் பேய்க்கும் கணிசமான வாக்குகள் நிச்சயம். அந்த வகையில் இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் சுலபத்தில் கரையேறி விடுகிறார்.