இதுவரை யாரும் எடுக்காத ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர் ஒருவர் அதற்காக பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு கதையை எழுதுகிறார். ஆனால், அந்த கதையை அவரால் படமாக்க முடியாமல் போக, விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் நாயகன் சித்து, கதை எழுதுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த வீட்டுக்குள் செல்ல,, வீட்டுக்குள் நுழைந்ததுமே அபசகுனமான சில விஷயங்கள் நடந்தேற, ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நாயகன், ஒரு கட்டத்தில் ஆவியின் ஆதிக்கம்உணர்கிறான்.
50 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இயக்குனர் எழுதிய ஸ்கிரிப்ட்டில் இருந்து ஒவ்வொரு காகிதமாக அங்கிருப்பவர்களை தேடி வர, அதில் இருப்பது போல் நடந்தால், வீட்டினுள் இருப்பவர்கள் உயிருடன் இருக்கலாம், அப்படி இல்லை என்றாலும், அங்கிருந்து தப்பிக்க நினைத்தாலும், அனைவரும் இறந்து விடுவார்கள் என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருக்க…
அதன்படி, சித்துவும் அவரது நண்பர்களும் சில விசயங்களை செய்தாலும் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது.
இந்நிலையில், சித்துவின் காதலி ஸ்ருதி ராமகிருஷ்ணன் அவரை தேடி அந்த வீட்டுக்கு வந்து அவரும் அந்த சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்.
இப்போது தான் விபரீதம். சித்துவையும் அவரது காதலியையும் கொலை செய்தால் மட்டுமே மற்றவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியும், என்று எழுதப்பட்ட அடுத்த காகிதம் அவர்களுக்கு கிடைக்க, அதை படித்த நண்பர்கள் அதில் இருப்பது போல் செய்தார்களா?, அங்கிருந்து அனைவரும் தப்பிக்க முடிந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரை மூலம் மக்களிடம் பிரபலமான சித்து, வெள்ளித்திரையில் முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி கவர்கிறார்.
நாயகியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், காதலனை தேடி வந்து பேயிடம் சிக்கிக் கொண்டாலும், அங்கு நடப்பதை உணராமல் ஜாலியாக இருப்பது, பிறகு விஷயம் தெரிந்தவுடன் பயப்படுவது என அந்த அழகு முகத்திலும் பீதி முகம் காட்டுகிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் வெற்றி, ரியாமிகா, சரத், மதனகோபால் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தம்.கூடவே கதை ஓட்டத்திற்கு பக்கபலம் அந்த பேய் வீட்டிலும் அவர்கள் அடிக்கும் ‘டைமிங் காமெடி’ தனிரகம்.
சாமியாராக மைம் கோபி மற்றும் அகோரியாக சாயாஜி ஷிண்டே பாத்திரச் சிறப்பில் தங்கள் கேரக்டர்களை பளபளப்பாக்குகிறார்கள்.
ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் பல கோணங்களில் அந்த வீட்டை காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த், இசை தந்த 4 மியூசிக் இந்த ஆவிக்கதைக்கு அனலூட்டுகிறார்கள்.
திகில், திரில்லுக்கு பஞ்சமில்லாத கதை. திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை இன்னொரு பலம்.
