நந்திவர்மன் திரை விமர்சனம்

சோழர்களின் பெருமையைச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்லவர்களின் வரலாற்றை சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘நந்திவர்மன்.’
தமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் புதையலைத் தேடி வந்த ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்ற ஆயுதம் எது என்று தடயவியல் துறையாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அகழ்வாராய்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரியான நிழல்கள் ரவி, போஸ் வெங்கட் தலைமையில் ஒரு மாணவர் குழுவை அந்த இடத்துக்கு அகழ்வாராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கிறது.
மாலை 6 மணிக்குமேல் இரவில் அந்தப் பகுதியில் ஊர் மக்கள் நடமாடுவதைத் தவிர்த்து வந்திருக்க, அப்படியும் அடையாளம் தெரியாத ஆயுதத்தால் ஒருவர் கொல்லப்பட… இப்போது அகழ்வாராய்ச்சி நடைபெறும் நேரத்தில் அந்த ஊர் இளைஞர் ஒருவரும் அதே பாணியில் கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அது பற்றி விசாரணை செய்ய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ரவி வருகிறார். இந்நிலையில் அகழ்வாராய்ச்சி செய்யும் மாணவர்களின் ஒருவரும் அந்த இடத்தில் வைத்து அதே போன்ற அடையாளம் காண முடியாத ஆயுதத்தால் கொல்லப்பட, இது சம்பந்தமாக ஆராய இரவில் வரும் சுரேஷ் ரவியும் தாக்கப்படுகிறார்.

அடையாளமே கண்டு பிடிக்க முடியாத ஆயுதத்தால் கொலை நடக்கும் பின்னணி என்ன? அங்கு நடக்கும் எல்லாமே அமானுஷ்ய சக்தியால் நடந்ததா என்பதற்கு கிளைமாக்சில் விடை சொல்கிறார் இயக்குனர் ஜி.வி.பெருமாள் வரதன்.
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, காக்கி சட்டை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். நடிப்பிலும் மிரட்டுகிறார். சண்டைக்காட்சிகளில் அனல்வீச்சு தெரிகிறது. ஆராய்ச்சிக் குழுவில் ஒருவராக வரும் ஆஷா வெங்கடேஷ், நடிப்பில் காதல் பார்வை கச்சிதம்..
இரண்டாவது நாயகனாக வரும் போஸ் வெங்கட்டின் நடிப்பும், கதாபாத்திர வடிவமைப்பும் அந்த கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறது. நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி கேரக்டர்களாகவே மாறித் தெரிகிறார்கள்.
கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பழங்காலத்து கோவிலை வடிவமைத்த விதம் கன கச்சிதம்.
ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் அதிரடி மிரட்டல்.
அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன், சரித்திரப் பின்னணியிலான இயக்கத்தில் புது வடிவம் கொடுத்திருக்கிறார்., கண்ணுக்கு தெரியாத உலோகத்தினால் செய்யப்பட்ட நந்திவர்மனின் மாய வாள் பின்னணி மட்டும் காதுல பூ. என்றாலும் வரலாற்றுக் கதையில் இயக்குனர் படைத்திருப்பது வரலாறு.