மதிமாறன் திரை விமர்சனம்

வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை.

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படுவதும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்கிறது. இந்த கொலைகளை ஒரே நபர் தான் செய்கிறார், என்பதை போலீஸ் கண்டு பிடித்தாலும், கொலையாளி மட்டும் ‘சிக்குவேனா’ என்கிறான்.

இதற்கிடையே, வீட்டில் இருந்து வெளியேறிய தனது அக்காவை தேடி திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், காணாமல் போன ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார். அவர்களின் பெண்ணை கண்டு பிடிக்க, தனது கல்லூரி தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதியின் உதவியோடு களம் இறங்குகிறார்.

கொலையாளியை கண்டு பிடிக்க முடிந்ததா? மர்மக் கொலைகளின் பின்னணி என்ன?, வீட்டில் இருந்து வெளியேறிய நாயகனின் சகோதரி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கான விடை , எஞ்சியுள்ள பரபர திரைக்களம்.

கதையின் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், அறிமுக நடிகர் என்றால் ஆச்சரியம்.பத்து படத்தில் நடித்த அனுபவம் நடிப்பில் தெரிகிறது. தனது வளர்ச்சி குறைபாட்டை நாசூக்காக சுட்டிக்காட்டும் போதும், தன் தாய், தந்தை இறக்கும் போதும் இயல்பான நடிப்பில் மனம் பதிகிறார்..

இவானாவின் கதாபாத்திரம் முதல் பாதியுடன் முடிந்து போனாலும் வந்த வரை நிறைவு.

வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரி தோழியாகவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் வரும் ஆராத்யா நடிப்பில் கம்பீரம் கலந்த அழகு.

வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மகளுக்காக எடுக்கும் முடிவில் மனதை கலங்கடித்து விடுகிறார்.,

பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் இன்னபிற பக்கபலம்
எழுதி இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை கிரைம் திரில்லர் கதை சேர்த்து சொல்லிய விதம் இதம்.
மதிமாறன், மனம் கவர்ந்தவன்.