சிக்கலில் சிக்கிய விக்னேஷ்சிவன்

மனைவி நயன்தாரா சிபாரிசில் அஜித்தை வைத்து படம் இயக்க இருந்தார், விக்னேஷ் சிவன். இவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்காமல் போக, அந்த கதையில் இப்போது ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.

படத்துக்கு ‘எல்.ஐ.சி.’ என்று பெயர் வைத்தார்கள். அப்போதே ஒரு பஞ்சாயத்து எட்டிப்பார்த்தது.. அதுவும் படத்துக்கு பூஜை போட்ட அன்றே ‘எல்.ஐ.சி’ என்ற தலைப்பு என்னுடையது’ என்று இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் அறிக்கை விட்டார். ‘‘என்னிடம் இந்த தலைப்பை விக்னேஷ் சிவன் தரப்பு கேட்டதற்கு நான் மறுப்பு தெரிவித்த பிறகும், அதை பயன்படுத்தியிருப்பது மிகப்பெரிய மோசடி, என்று கொந்தளித்து இருந்தார்.. இது குறித்து அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ‘விக்னேஷ்சிவன் அண்ட் கோ’வுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

இந்த அதிர்ச்சி போதாதென்று புதுசாக இப்போது இன்னொரு சிக்கல்., ‘லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், மேலும் ஒரு படத்தை தங்களது நிறுவனத்துக்காக இயக்க வேண்டும் என்று அப்போதே பிரதீப் ரங்கநாதனிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.. அதன்படி, ‘லவ் டுடே’படத்தின் தாறுமாறு வெற்றிக்குப் பிறகு படம் இயக்க அழைத்தபோது ‘இதோ அதோ’ என்று போக்கு காட்டியிருக்கிறார்.

இதற்கு கதை தயாராகவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. தயாரிப்பு தரப்போ காத்திருக்கி்றோம் என்று சொல்ல…

இந்த சமயத்தில் தான் விக்னேஷ்சிவன் அழைத்ததும் நடிக்க ஒடி வந்திருக்கிறார், பிரதீப்
இதில் கடுப்பான ஏஜிஎஸ். நிறுவனம், ‘ஒப்பந்தப்படி எங்களுக்கு படம் இயக்கி கொடுத்துவிட்டு பிறகு நீங்க நடிக்கும் படத்துக்கு போங்க’ என்று கறார் காட்ட…

இதில் விழி பிதுங்கியதும் மறுபடியும் விக்னேஷ்சிவன் தான். இப்போதுதலைப்பு பிரச்சினையை சரி செய்ய வேண்டும். அடுத்து ஏஜிஎஸ். நிறுவனத்தையும் சமாளித்து பிரதீப்பை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பார்த்தால் இங்கே புண்ணாகிறது. ‘ஏனிப்படி எனக்கு மட்டும் இப்படி’ என்று வெளிப்படையாகவே புலம்பத் தொடங்கி விட்டாராம் விக்கி.