கேப்டன் மில்லர் திரை விமர்சனம்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடக்கும் கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்க அந்த கால கட்டத்தில் அவர்களின் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு அதில் சேர்கிறார் தனுஷ்.. ஆனால், தனுஷின் அண்ணன் சிவராஜ் குமாரோ ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்.

கடினப்பயிற்சியில் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளை பெற்று தரமான சிப்பாயாக மாறுகிறார், தனுஷ். ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்தியர்களை கொல்ல தனுஷிற்கு உத்தரவு வருகிறது. முதலில் அதை ஏற்றுக்கொண்டு தன் சொந்த மக்களையே சுட்டுத் தள்ளும் தனுஷ் ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்து, இந்திய மக்களை சுடச் சொன்ன ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்துகிறார். அதன் பிறகு, மில்லராக இருந்த தனுஷ் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் கேப்டன் மில்லராக மாறி எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே மீதிக் கதை .

தானொரு சிறந்த நடிகர் என்பதை கேப்டன் மில்லரிலும் உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். சிப்பாயாக நடை, உடை, கம்பீரம் என மிடுக்காக பொருந்தியுள்ளார். அனல் தெறிக்கும் சண்டைக் காட்சிகளில் எதிரிகள் கதம் கதம்..

ஜெயிலரில் மிரட்டிய சிவராஜ் குமாருக்கு மற்றுமொரு மிரட்டலான கதாபாத்திரம். குதிரையில் வரும் கம்பீரத்தில் கரகோஷம் வாங்குகிறார்.

பிரியங்கா மோகன், இளங்கோ குமாரவேல், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதிஷ் ஆகியோரும் பாத்திரங்களோடு இணைந்து கொள்கிறார்கள்..

வில்லன்களாக ஜெய பிரகாஷ், ஜான் கொக்கன் ஆகியோர் தேவையான மிரட்டலையும் வஞ்சகத்தையும் கடத்தியிருக்கிறார்கள். சந்தீப் கிஷன் இன்னொரு இனிய ஆச்சரியம்.

படத்தின் இன்னொரு நாயகன் ஜி.வி.பிரகாஷ். இசையால் படம் தரும் வீரியத்தை நமக்குள் கடத்தி விடுகிறார்.

ஒரு சாதாரணனை கேப்டன் லெவலுக்கு தயார் செய்யும் திரைக்கதை, இயக்கிய அருண் மாதேஸ்வரனுக்கு மணிமகுடம் சூட்டி விடுகிறது