ஹனு-மான் திரை விமர்சனம்

நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்க, அதன் மூலம் மாபெரும் பலசாலியாகிறார். ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். தேஜா சஜ்ஜாவின் இந்த விசேஷ சக்தி பற்றி தெரிந்து கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் உள்ள சக்தி வாய்ந்த கல்லை பறித்து தன்னை சர்வ சக்திமிக்கவராக காட்ட நினைக்கிறார். வில்லன் நினைத்தது நடந்ததா?, தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்தி வாய்ந்த கல் கிடைத்தது எதற்காக?

கேள்விகளுக்கான பதிலை தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறையாமல் பேன்டசி ஜானரில் சொல்வதே இந்த ‘ஹனு-மான்.’

நாயகனாக தேஜா சஜ்ஜா, துறுதுறு நடிப்பால் தன் ஹனுமந்த் கேரக்டரை நமக்குள் சுலபத்தில் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார். திடீர் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்கள் அனைத்திலும் உச்சம், நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு படத்தில் ரயிலை விரலால் நிறுத்தியது போல் செய்து காட்ட கிளம்பும் காட்சி தான். இந்த காட்சிக்கு தியேட்டர் வெடித்து சிரிக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயருக்கு வலுவான வேடம். லேடி ஹீரோவாக அவர் காட்டும் அதிரடிகள் ரசிக்கத்தக்கவை.

நாயகனின் அக்காவாக வரலட்சுமி. தம்பியை காப்பாற்றுவதற்காக அதிரடியில் இறங்கி அமர்க்களப்படுத்துகிறார், இந்த அக்கா.

வில்லனாக வினய் ராய். சூப்பர் மேன் ஆக ஆசைப்பட்டு இறுதியில் சூப்பர் வில்லனாக நெஞ்சில் நிற்கிறார்..

வெண்ணிலா கிஷோர் வரும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க உத்தரவாதம்.

சமுத்திரக்கனியின் வேடம் திரைக்கதையின் இன்னொரு பலம். இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்கள் இதயம் வரை இறங்குகிறது.

கமர்ஷியல் படமாக ஆரம்பமாகி பேண்டஸி படமாக திசை திரும்பி இறுதியில் ஆன்மீகப் படமாக முடியும் ஹனுமான் எந்த இடத்திலும் சோர்வு தட்டவில்லை என்பது இயக்கச் சிறப்பு. இதற்காக இயக்குனர் பிரசாந்த் வர்மாவை கொண்டாடலாம்.

வில்லன் வினய்யின் சூப்பர் மேன் பவர் மற்றும் அதற்கு அவர் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிகளை சுவாரஸ்யமாக்குவதோடு பெரியவர்களையும் குழந்தைகளாக்கி குதூகலிக்க வைக்கிறது..

இந்த பொங்கல் ரேசின் நிஜமான வெற்றி நாயகன் இந்த ஹனுமான் தான்.