கால் டாக்ஸி டிரைவரான நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் குடிக்கு அடிமையானவர்கள். கார் ஒட்டி சம்பாதிக்கும் பணம் ‘கட்டிங்’கிலேயே கரைந்து போகிறது.
குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, மற்றவர்கள் குடும்பத்துக்கும் சிக்கல்கள் வரிசை கட்ட, அப்போதும் எப்போதும் மது போதையில் இருக்கும் இவர்கள் அந்த போதையினாலேயே மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் சிக்கிக்கொள்ள, அதில் இருந்து மீண்டு வந்தார்களா?மது பழக்கத்தை கைவிட்டார்களா? என்பதை சொல்வது தான் கிளாஸ்மேட்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் அங்கையற்கண்ணன் அறிமுக நாயகனாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி குடித்து கவனம் ஈர்க்கிறார். மதுபோதையில் அவர் செய்யும் ரகளைகள் ரசிக்கும்படி இருக்கிறது.
இயக்குனர் சரவணசக்தி அங்கயர்க்கண்ணனின் கூட இருந்து குடி கெடுக்கும் மாமனாகவும் வருகிறார். இவர்கள் நிரப்பிய கிளாஸ்களால் முதல்பாதி படம் நிரம்பி வழிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் பிரனா, கணவன் என்னதான் குடிக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது அந்த பாத்திரம் மீது கோபத்தையே ஏற்படுத்துகிறது..
குடிகாரர்களை குணப்படுத்த வந்து விட்டு அவர்களை விட பெரிய குடிகாரராகும் டி.எம்.கார்த்திக், துபாயில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்தாலும், கோட் சூட்டுடன் வலம் வரும் சாம்ஸ், மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, மயில்சாமி என அனைவருக்குமே குறையில்லாத நடிப்பு.
அயலி’ அபி நட்சத்திராவை கிளைமாக்சில் வைத்து ‘அப்படியான ‘ பாத்திரத்தில் பார்க்கும்போது பகீர் என்கிறது.
மதுப்பிரியர் மயில்சாமி, ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என தத்துவம் பேசும் இடம் சிரிப்ஸ்.
அருள்தாசும், மீனாளும் கிடைத்த கொஞ்ச வாய்ப்பிலும் சிக்சர் அடிக்கிறார்கள்.
இசை அமைப்பாளர் பிரித்வியின் பாடல்கள் கிக் ரகம்.
இந்த சரக்கு படம் மூலம் சொல்ல வந்த கருத்து என்னவோ நியாயமானது தான். அதற்காக படம் முழுக்க நிரம்பி வழியும் கிளாசில் தான் அதை சொல்ல வேண்டுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
போதைப்பயணம்
