ரணம் திரை விமர்சனம்

அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் கிடைக்கும் உடலை வைத்து, அவர் யார்? என்பதை வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இந்நிலையில் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடைக்கிறது. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.

திடீரென்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், இந்த வழக்கிற்குள் வர வேண்டாம் என்று வைபவ்விடம் சொல்ல… இதையடுத்து, புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் வழக்கு விசாரணையை கையில் எடுக்க, அவருக்கும் வைபவ்வின் உதவி கிடைக்கிறது. அதோடு எரிந்த நிலையில் கிடந்த மர்ம கொலைக்கான பின்னணியையும், கொலையாளியையும் கண்டுபிடித்து விடுகிறார்.

அவர் எப்படி கண்டுபிடித்தார்?, அந்த கொலையாளி யார்?, எதற்காக கொலை செய்கிறார்?, வைபவுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு?

கேள்விகளுக்கான விடையே திரில்லரின் பின்னணியிலான இந்த ‘ரணம்’.நாயகனாக வரும் வைபவ்வுக்கு இதுவரை நடித்திராத கேரக்டர். அளவாக, அழகாக கேரக்டருக்குள் நிற்கிறார். குழப்பம் நிறைந்த கொலை வழக்கின் பின்னணியை கண்டுபிடிக்கும் இடங்களில் அவர் நடிப்பும் தனித்துவம் பெறுகிறது. கனமான பாத்திரத்தில் நடிப்பிலும் கனம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தன்யா ஹோப், தனது மிடுக்கான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மையப்புள்ளியே நந்திதா ஸ்வேதா தான். இளம் விதவையாக 10 வயது பெண்ணுக்கு அம்மாவாக அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக வெளிப்படுகிறார். இறந்த மகளின் உடலைப்பார்த்து அவர் கதறும் காட்சியில் நம் கண்களிலும் ஈரம்.

வைபவின் காதலியாக சரஸ் மேனன், வந்துபோகிற கொஞ்ச நேரத்திலும் மின்னல் கீற்றாய் பளிச்சிடுகிறார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் கேமரா இரவு நேர காட்சிகளை படம் பிடித்ததில் அத்தனை நேர்த்தி. அரோல் கொரோலியின் இசையில் பாடல்கள் ரசனை.

புதிய கோணத்தில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கடைசி வரை சஸ்பென்சாக சொன்ன விதத்துக்காகவே இயக்கிய ஷெரிஃப் தமிழ்த்திரைக்கு கிடைத்த நல்வரவாக கொண்டாடப்பட வேண்டியவர்.