புறா பந்தயத்தை மையப்படுத்தி தமிழ்த்திரை உலகில் ஒரு திரைக்காவியம். பைரி என்பது புறாக்களை வேட்டையாடும் ஒரு கழுகு இனம். படத்திலோ புறாப்பந்தய போட்டியில் அன்பு வேட்டையாடப்படுகிறது. படத்தின் நாயகன் சையத் மஜித் திரைக்கு புதுசு. ஆனால் நடிப்புக்கு புதுசு இல்லை என்பதை காட்சி வாரியாக நிரூபிக்கிறார். அதுவும் காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.
கதையின் மையமே புறாப்பந்தயம் தான். வேலைக்கு செல்லாமல் புறா வளர்த்து அதைப் பந்தயத்தில் விடுகிறார், நாயகன். இன்னொரு பக்கம் ஊரில் பெரிய ரவுடியாக இருக்கும் வினு லாரன்சும் புறாப் பந்தயம் நடத்துகிறார். ஆனால் நேர்மையான வழியாக இல்லாமல் மோசடி வழியில் நடத்தி வெற்றி பெற நினைக்கிறார்.
அவர் பந்தயத்தில் செய்யும் மோசடியை மஜித் அம்பலப்படுத்த, இதுபோதாதா…முட்டிக்கொள்ளவும் மோதிக்கொள்ளவும் ரத்தம் பார்க்கவும் திரைக்கதை கணிசமாக இடம் கொடுக்கிறது. இந்த மோதலில் ‘வாழ்வா சாவா’ நிலைக்கு போகும் நாயகன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை பந்தயப்புறா வேகத்தில் சொல்கிற திரைக்கதை படத்தின் பெரும் பலம்.
பந்தயப் புறா வளர்ப்பின் பின்னணி விரிவாக சொல்லப்பட்டவிதம் சுவாரஸ்யம். படத்தின் கதை நாகர்கோவில் பின்னணியில் நடப்பதால் அந்த நாகர்கோவில் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியோடு செயற்கைப் பூச்சின்றி யதார்த்தமாகக் காட்டுகிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அந்த ஆக்ரோஷமும் ஆவேசமும் திரை தெறிக்கும் ரகம். ஊருக்கு போன மகனை அவன் நண்பர்கள் திரும்ப கூப்பிடக்கூடாது என்பதில்அந்த தாய் காட்டும் அத்தனை ஆவேசத்திலும் பாசமுள்ள தாய்மை மிளிர்கிறது.
இயக்குநர் ஜான் கிளாடி படத்தில் கதாநாயகனின் நண்பனாக வருகிறார். ஒரு நடிகராக அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
சுயம்பு என்கிற பெயரில் எதிர்மறைப் பாத்திரம் ஏற்று நடித்துள்ள வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி உள்ளன.
ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோவில் மண்ணின் அழகும் மக்களின் வாழ்வியலும் தெளிவோ தெளிவு.
இசை அமைப்பாளர் அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்ரகம்.
இயக்குநர் ஜான் கிளாடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாக வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களைத் திருப்தி கொள்ளச் செய்கிறார்.
நடிகர்களில் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் அனைத்து கதாபாத்திரங்களையும் அடையாளம் கண்டு மதில் பதிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார். சரண்யா ரவிச்சந்திரன், விஜி சேகர் தவிர நடித்த அத்தனைபேரும் புதுமுகங்கள். ஆனால் நடிப்பில் கவனிக்கும் முகமாக மனதில் ஏற்றி விடுகிறார் இயக்குனர். குறிப்பாக இருபக்கமும் சமாதான தூதராக வரும் ‘அய்யா வழி’ ரமேஷ் ஆறுமுகம் கவனிக்க வேண்டிய முகம்.
‘பைரி’வெற்றி வேட்டைக்காரன்.
