‘‘திரைப்படப் பாடல்களின் இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம்’’

‘குற்றம் தவிர்’ படத் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் அதிரடி

ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘குற்றம் தவிர்.’ அட்டு படப் புகழ் ரிஷி ரித்விக் நாயகனாக நடிக்க, ஆராத்யா நாயகி. சரவணன், சென்ராயன், வினோதினி ஏனைய பிரதான நட்சததிரங்கள்.

பி.கே.எச். தாஸ் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை.குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் படக்குழுவினரை வாழ்த்திப் பேசுகையில், “நாட்டில் உள்ளவர்கள் குற்றங்களைத் தவிர்த்து நல்லதை நினைத்து நல்லதைப் பேசி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் குற்றம் தவிர் என்கிற அற்புதமான கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார்.இப்படத்தின் ஆரம்ப விழாவை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவும் அழகாகவும் நடத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் .

இந்தப் படம் விரைவில் எடுக்கப்பட்டு நல்ல முறையில் வெளியாகி தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுதும் மக்களிடம் நல்லாதரவைப் பெற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம்.இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் வாங்குகிறார்.

இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும்.இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 டியூன் கூட வாங்கி பிடித்ததை தேர்ந்தெடுப்போம் .

கொத்தனார் நமக்கு ஒரு வீடு கட்டித்தருகிறார். அவருக்கு கூலி கொடுத்து விடுகிறோம்.கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது ‘இந்த வீடு நான் கட்டியது. எனக்குத் தான் சொந்தம் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ, அதைப்போல தயாரிப்பாளர்கள் காசு கொடுத்து வாங்கிய இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம் .அவர் எங்களுக்கு வேலை செய்தார்.அது யாராக இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் .

அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்களும் பாடலுக்கு உரிமை கொண்டாடினால் என்னாவது? அந்த எண்ணமே தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்’’ என்றார்.

நாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது, ‘‘அட்டு படத்திற்கு பிறகு நான் இதில் நடிக்கிறேன். இயக்குநர் தயாரிப்பாளர் பெங்களூரில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் கன்னடம் என்று நினைத்தேன் .ஆனால் அவர்கள் தமிழ்நாடு என்று சொன்னார்கள். அருமையான கதை.இந்தப் படம் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் அருமையான கதை’’ என்றார்.