நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியன்று ‘சேவையே கடவுள்’ அறக்கட்டளையிலிருந்து ‘மாற்றம்’ என்ற பெயரில் பல உதவிகளை செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்த அமைப்பில் தானும் இணைந்து கொள்வதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இதன் மூலம் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு 10 டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார். இது குறித்து அவர், “நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கி உதவி செய்யப்போகிறேன். எல்லோரும் இந்தப் பயணத்தில் இணைந்து எனக்கு உதவி புரியுங்கள். வார்த்தைகளை விட செயல் பெரியது” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கான துவக்க விழாவில் நடிகர் லாரன்ஸின் தாயார், “இது சேவையாக மட்டுமே இருக்கணும். அரசியலாக்கிடாதப்பா!” என அறிவுரை கூறியிருப்பது சிறப்புத்தகவல்.