ஒரே இரவில் மூன்று வெவ்வேறு ரவுடி கும்பல்கள் இடையே நடக்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு பக்கம் நாயகன் வெற்றி தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் கூட்டி செல்கிறார்.
இன்னொரு பக்கம் ஒரு ரவுடி தனது தங்கையை காணவில்லை என்று ஊர் முழுக்க தனது அடியாட்களை வைத்து தேடி வருகிறான்.
அதேசமயம் அந்த ரவுடியை கொல்ல வேண்டும் என்று மற்றொரு கும்பல் கூலிப்படையை அனுப்புகிறது. இந்த மூன்று கதைகளும் ஒரே இடத்தில் இணைகிறது.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி வழக்கம் போல் அவருக்கே உரிய பிராண்ட் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். அவர் நல்லவரா?, கெட்டவரா? என்ற கேள்வியோடு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனையை தனது கேரக்டரில் அவர் நிறைவாக வெளிப்படுத்தியிருப்பது அழகு.
தந்தையைக் கொலை செய்தவர். போதை மருந்துக் கூட்டத்தில் இருப்பவர். காதலித்த பெண்ணையே காசுக்காக கைமாற்றி விடத் துடிப்பவர் என்று முழுக்க ஒரு எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மிகவும் தைரியம் வேண்டும். பாராட்டுக்கள் வெற்றி.

சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பேசாமல் நடித்திருக்கும் மற்றொரு நாயகன் முருகன். நாயகன் வெற்றிக்கு சவால் விடும் அளவுக்கு இறுக்கமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை செண்டிமெண்ட்டில் ரசிகர்களை கலங்க வைப்பதில் வெற்றி பெற்று விடுகிறது, இவர் நடிப்பு.
நாயகியாக அக்ஷயா நடிப்பில் குறையொன்றும் இல்லை. மற்றொரு நாயகியான வினுபிரியா திரைக்கதையின் திருப்பத்துக்கு உதவுகிறார்.
காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலுவுக்கு இந்த படத்தில் வில்லன் பாத்திரம். வில்லனாகவே முறைத்துக் கொண்டு திரியும் சாய் தீனாவுக்கு இதில் காமெடி பாத்திரம். பாத்திரங்கள் இடம் மாறினாலும் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்கள், இருவரும்.
படம் முழுவதும் இரவு நேரத்தில் நடக்கிறது. ஆனால், அந்த உணர்வே ரசிகர்களிடம் ஏற்படாத வகையில் ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா மாயாஜாலம் காட்டுகிறது.
விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
படத்தில் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முருகன், கதை எழுதி இயக்கியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில், ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுக்க வேண்டும் என்ற அவரது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.