பிடி சார் திரை விமர்சனம்

கள்ளக்குறிச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவியின் சர்ச்சைக்குரிய மரணத்தை அடிப்படையாக வைத்து கொஞ்சம் கூடுதல் மசாலாவுடன் வந்திருக்கும் படம். அந்த மாணவிக்கு நீதி கிடைக்க ஒரு பி.டி. வாத்தியார் எப்படி முயற்சி எடுக்கிறார் என்பது விரிவான திரைக்களம்.

பி.டி. ஆசிரியராக வரும் ஆதி ஆரம்பத்தில் அப்பாவி அப்புறமாய் அடிதடி என்று கோதாவில் இறங்குகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழும் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். ஆரம்ப அப்பாவித்தன நடிப்பிலும் புதுசாக தெரிகிறார்.

அனுதாபத்துக்குரிய பள்ளி மாணவி கேரக்டரில் அனிகா ஆசம். திரைக்கதையின் மையமே இவர் கேரக்டர் என்பதால் முடிந்தவரை அதை நடிப்பில் சுமந்திருக்கிறார்.

ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசி டீச்சராக வந்து நடிப்பில் பாடம் நடத்திப் போகிறார்.

கல்வி நிறுவனங்களின் உரிமையாளராக நடித்திருக்கும் தியாகராஜன் அந்த சைலண்ட் நடிப்பில் மிரட்டி விடுகிறார், மிரட்டி.

பிரபு, கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, ஒய்.ஜி.மதுவந்தி, சுட்டி அரவிந்த், ஆர்.ஜே.விக்கி, அபி நட்சத்திரா என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள். இளவரசு மற்றும் தேவதர்ஷினி கிடைத்த கேரக்டர்களில் மனதில் புகுந்து கொள்கிறார்கள்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் ஹிட் ரகம். குறிப்பாக அச்சமில்லை பாடல் அள்ளுகிறது

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், அதை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் கவனம் பதிகிறார்.. அப்படியே பிரச்சினைக்கான தீர்வையும் சொல்லியிருக்கலாம்