நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கிறாரா? ‘வா வாத்தியார்’ பட பர்ஸ்ட் லுக் எற்படுத்திய பரபரப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்தி காக்கி உடையும், கலர் கலரான கண்ணாடியும் அணிந்து தோன்றுவதும், பின்னணியில் தமிழ் திரையுலகத்தின் சாதனை செய்து, இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாம்பவான் எம்ஜிஆரின் வேடமணிந்து கலைஞர்கள் நிற்பதும்… படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ரசிகர்கள் அன்புடன் ‘வாத்தியார்’ என அழைப்பது உண்டு. அந்த வகையில் படத்தின் தலைப்பும் போஸ்டரும், நாயகன் எம்ஜிஆர் ரசிகர் என்பதை உறுதி செய்கிறது. காவல்துறை உடையணிந்து கார்த்தி நிற்க, அவருக்குப் பின்னாலும், அவரைச் சுற்றியும் எம்ஜிஆரின் வெவ்வேறு கெட்டப்புகள் கொண்ட உருவப் படங்கள் உள்ளன.
படத்தில் கார்த்தி போலீஸாக நடிக்கிறாரா? அவர், வெறும் எம்ஜிஆர் ரசிகரா அல்லது அதைத் தாண்டி வேறு எதையும் படம் பேசுகிறதா உள்ளிட்ட பல கேள்விகளும், நலன் குமாரசாமியின் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின் வெளியாகும் படம் என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.