‘வடக்கன்’ தலைப்பு மாறி இப்போ ‘ரயில்’ ஆனது

தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கும் கதை, வசனம் எழுதிய பாஸ்கர்சக்தி இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. இந்த டைட்டில் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து ‘ரயில்’ என்ற தலைப்புடன் வெளியாக இருக்கிறது படம்.

எதுக்காக தலைப்பை மாத்தச்சொன்னாங்க? பாஸ்கர் சக்தியிடம் கேடடால்…

‘‘குறிப்பிட்ட சாராரை குறைச்சு மதிப்பிடறதா இந்த தலைப்பு இருக்குனு அவங்க நினைக்கிறாங்க. நான் அப்படி நினைக்கலை. எனக்கு அப்படித் தோணவும் இல்லை. ஆனா, ‘இந்த தலைப்பு, அவங்களை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு. ஒரு மொழி பேசறவங்களையோ, ஒரு பகுதியை சேர்ந்தவங்களையோ அப்படி வேறுபடுத்தி, வித்தியாசப்படுத்திப் பார்க்கக் கூடாது, அது சமூகத்துல பிரிவினையை உண்டாக்கும், அதனால தலைப்பை மாத்துங்க’ன்னு சொன்னாங்க.

தனிப்பட்ட முறையில என் கருத்து என்னன்னா, ஒரு கதைக்கு ஏற்ற தலைப்பை வைக்கிறோம். அதைக் கதையோட பொருத்திப் பார்த்துதான், அது வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணணும். ஒரு வார்த்தையை மட்டும் வச்சுகிட்டு, ‘இது நல்லாயில்ல, வேற வையுங்க’னு சொல்றது சரியான பதில் இல்லைன்னு நினைக்கிறேன்.

இத்தனைக்கும் பிரிவினையையோ, வேற்றுமையையோ வலியுறுத்துற கதை இல்லை. எல்லோரும் ரசிக்கக் கூடிய எமோஷனலான கதை. மனிதர்கள், சக மனிதர்களை எப்படிப் பார்க்கணும்னு சொல்ற படம். வெவ்வேறுவிதமான ரசனை, மொழி, இனம், கலாச்சாரம், உணவு… இப்படி இருந்தாலும் நாம ஒன்னாதான் வாழ வேண்டியிருக்கு. அப்படி பழகும்போது மத்தவங்களை எப்படி அணுகணும், எப்படியிருந்தா சமூகத்துக்கு நல்லாயிருக்கும் அப்படிங்கற என் பார்வையை, இந்தப் படத்துல சொல்லியிருக்கேன்.

பிழைப்புக்காக இங்க வர்ற ஒரு வட இந்திய குடும்பத்துக்கும் தென்னிந்திய குடும்பத்துக்குமான உரையாடல், இந்தப் படத்துல தொடர்ந்து இருக்கும். அது எப்படியிருக்கு, எப்படியிருக்கணுங்கறதை சொல்லியிருக்கேன். கமர்ஷியலா எல்லோரும் ரசிக்கும்படியா இருக்கும்.

குங்குமராஜ், நாயகனா நடிச்சிருக்கார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். பரீட்ஷா, கூத்துப்பட்டறையில இருந்தவர். அந்த கேரக்டராகவே மாறியிருக்கார். இதுல ஹீரோயின் கேரக்டர் ரொம்ப முக்கியம். வைரமாலா நாயகியா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காங்க. பர்வேஸ் மெஹ்ருங்கற பையன் வட இந்தியாவைச் சேர்ந்தவரா நடிச்சிருக்கார். காஷ்மீரை சேர்ந்தவர், பெங்களூருல வசிக்கிறார். ஒரு நண்பர் மூலமா ஆடிஷனுக்கு வந்தார். நல்லா நடிச்சிருக்கார். ஷமீரா, அவர் மனைவியா நடிச்சிருக்காங்க. என் நண்பர் ரமேஷ் வைத்யாவை ஒரு கேரக்டர்ல நடிக்க
வச்சிருக்கோம்.

இயக்குநர் லிங்குசாமி படம் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது. சில கரெக்ஷன்கள் சொன்னார். அதை சரி பண்ணினதும் மறுபடியும் பார்த்தார். ‘இது நல்ல படம், மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கணும்’னு அவரே ஆர்வமா திருப்பதி பிரதர்ஸ் மூலமா வெளியிடறார். அது எங்களுக்கு பெரிய பலம்.