21-ம் நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் ரஜினி – பா.ரஞ்சித்தின் ‘காலா’

21-ம் நூற்றாண்டின் சிறந்த படங்கள் பட்டியலை ‘பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்’ வெளியிட்டுள்ளது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘காலா’படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படத்துக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ‘பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம் ‘சைட் அண்ட் சவுண்ட்’ என்ற பிரபலமான மாத இதழை வெளியிட்டு வருகிறது.

இந்த இதழில், உலகம் முழுவதும் வெளியான இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘ஓல்டு பாய்’, ‘கெட் அவுட்’, ‘ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்’, ‘அனாடமி ஆஃப் ஹெல்’ உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பா.ரஞ்சித்-ரஜினி இணைந்த ‘காலா’ திரைப்படமும் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், “21-ம் நூற்றாண்டின் கால்வாசியை நாம் கடந்து விட்டோம். இந்த மைல்கல்லை அங்கீகரிப்பதற்காக, சிறந்த விமர்சகர்கள் 25 பேரிடம் திரையுலக சகாப்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த படங்களை பரிந்துரைக்க கோரினோம். எதிர்காலத்தை கடந்தும் பேசப்படக்கூடிய, 2000 முதல் 2024 வரையில் பரவலான கவனம் பெற்ற படங்களை பட்டியலிட கோரினோம். அதன்படி இந்தப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு படம் என்ற ரீதியில் 25 படங்களை தேர்ந்தெடுத்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக இது ‘காலா’காலத்துக்கும் பெருமையான செய்தி தான்.