பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு மிகப்பெரும் பிரம்மாண்ட யூனிவர்ஸ் படத்தை கொடுத்திருக்கிறார், நாக் அஸ்வின்.
மகாபாரதத்தை மையமாக வைத்துக் கொண்டு உலகம் அழிந்த பின்னர் நடக்கும்படியான ஒரு கற்பனைக் கதையை கற்பனைக்கு கொஞ்சமும் பிரமாண்டம் குறையாமல் அதேநேரம் ஹாலிவுட் தரத்தில் தந்திருப்பது ஆனந்த ஆச்சரியம்.
இந்து மத நம்பிக்கையின்படி திருமால் எடுக்கும் தசாவதாரங்களில் அத்தனை அவதாரங்களும் முடிந்து விட, எஞ்சி இருப்பது கல்கி அவதாரம் மட்டுமே. அந்த அவதாரம் நிகழவிருப்பதை எதிர்காலத்துக்குச் சென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.
கிட்டத்தட்ட 6000 வருடங்கள் தொடர்பு கொண்ட இந்தக் கதை, முதல் பாகத்தில் கடந்த மகாபாரதக் காலத்தில் ஆரம்பித்து எதிர்கால விஞ்ஞான யுகத்தில் முடிகிறது.
கிபி 2898ல் நடக்கும் இந்தக் கதையில் கடவுள் தீபிகா படுகோனின் வயிற்றில் கருவாக உருவாக… எந்தப் பெண்ணின் வயிற்றிலும் கரு தங்காத அந்தக் காலகட்டத்தில் தீபிகா வயிற்றில் மட்டுமே கரு தங்குவதற்குக் காரணம், அந்தக் கரு கடவுள் என்பதால் தான்.
இன்னொரு பக்கம் பூமியின் வளமான உலகின் கடைசி நகரத்தை காசியில் உருவாக்கி அதற்கு ‘காம்ப்ளக்ஸ் ‘ என்று பெயரிட்டு வாழ்ந்து வருகிறார், வயதான சர்வாதிகாரி சுப்ரீம் யாஷ்கின்.(கமல் ஹாசன்) அவருடைய விஞ்ஞான கூடத்தில் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் இருந்து பெறப்படும் ஒரு ஸீரத்தை கொண்டு இளமையைப் பெறும் முயற்சியில் இருக்கிறார்.
இன்னொரு பக்கம் மகாபாரதப் போரில் சாகா வரம் பெற்ற அஸ்வத்தாமா, கிருஷ்ணனின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்திக்குக் காரணமான நெற்றிக்கல்லை இழக்கிறார். மீண்டும் அந்தக் கல், கல்கி அவதாரம் நிகழும்போது அவருக்கு கிடைத்து சாப விமோசனம் நிகழும் என்ற கணக்கின்படி இந்த 2898-ம் வருடத்தில் அந்தக் கல் அவருக்குக் கிடைத்து அதை நெற்றியில் ஞானக்கண்ணாக அணிந்து கொண்டு மகா சக்தி பெற்றவராகி விடுகிறார். (இந்த கேரக்டரில் அமிதாப்பச்சன்)
இதற்கிடையே வசதியான வாழ்க்கைக்குஆசைப்படும் பிரபாஸ் ஒரு பக்கம். வளமான் கமலின் காம்ப்ளக்ஸ்க்குள் நுழைவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழும் பிரபாஸ், அதற்காக எந்த வேலையும் செய்யத் தயாராக இருக்கிறார்.
இன்னொரு இடத்தில் கடவுள் கண்டிப்பாக வந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் மிஞ்சி இருக்கும் மக்கள் ஷம்பாலா என்கிற இடத்தில் சர்வாதிகாரி கமலின் கண்களுக்குப் படாமல் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் கமலின் காம்ப்ளக்ஸ் விஞ்ஞான கூடத்தில் இருந்து தப்பிக்கும் தீபிகாவை பாதுகாப்பான இடமான ஷம்பாலாவுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் பசுபதி ஈடுபட… அந்த வழியில் எல்லாம் கமலின் ஆட்கள் குறுக்கிட்டு தீபிகாவை அபகரிக்க முயல… தன் சக்தி திரும்ப கிடைக்கப்பெற்ற அமிதாப், தீபிகாவின் வயிற்றில் வளர்வது கடவுள்தான் என்று அறிந்து கொண்டு அவரைக் காக்க துணை புரிகிறார்.
இப்போது சர்வசக்தி அமிதாப்பை எதிர்த்து பந்தாடி தீபிகாவை மீட்டு வர கமலின் உத்தரவுப்படி பிரபாஸ் போகிறார் அமிதாப்பும் பிரபாசும் உக்கிரமாக மோதிக்கொள்ளும் இந்த மோதலின் முடிவு என்ன ஆகிறது என்பது பரபரப்பான முதல்பகுதிக் கதை.
தனது வழக்கமான கெத்தான மேனரிஸத்தோடு சண்டைக்காட்சிகள், பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், சின்ன சின்ன சேட்டைகள் என ஸ்கோர் செய்திருக்கிறார் பிரபாஸ். ஆனால், தன் நடிப்பில் சில இடங்களில் முகபாவனைகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.
தன் முதிர்ச்சியான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார், அமிதாப் பச்சன். தீபிகா படுகோனுக்கு பெரிய அளவில் வேலை இல்லை.
ஒரு சில காட்சிகளே வந்தாலும் தன் குரலாலேயே அதிர்வைக் கடத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
சஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் கதைக்குள் பொருந்திப் போகிறார்கள்.
மிருணாள் தாக்கூர், திஷா பதானி, பிரம்மானந்தா ஆகியோர் வழிப்போக்கர்கள் மாதிரி சலனம் இல்லாமல் கடந்து போகிறார்கள். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, இயக்குநர்களான ராஜமவுலி, ராம் கோபால் வர்மா, அனுதீப் என ஒரு பெரிய பட்டாளமே கதைக்குள் இருக்கிறார்கள். இருக்க மட்டுமே செய்கிறார்கள்.
கற்பனை உலகம், அதற்குள் நடக்கும் அதிரடியான ஆக்ஷன் சேஸிங் காட்சிகள், பிரமாண்ட ஷாட்கள் என ஒரு பிரத்யேக உலகத்தை ஒரு திரையனுபவமாக மாற்றும் பெரும் பணியில் ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்சின் பங்கு அதிகம்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பிரமாண்ட காட்சிக்கேற்ற பிரமாண்டம்.
மகாபாரத புராணக் கதைகளுடன், ரோபோக்கள், ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையைச் சொன்னவிதத்தில் இந்த கல்கி, நிஜமாகவே கலக்கல்